நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைத் தடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்த மசோதா விவாதத்தில், எதிர்க்கட்சிகள் மசோதாவின் உள்ளடக்கம் குறித்து விவாதிக்காமல், அரசியலாக்கியதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றம்சாட்டினார்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, நீட் மற்றும் இதர பொதுத்தேர்வு வினாத்தாள் கசிவை தடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்த மசோதாவின் மீதான விவாதம் முடிந்து நள்ளிரவு 12 மணிக்கு தான் நாடாளுமன்றத்தை விட்டு வெளியே வந்ததாக தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் மசோதா குறித்து பேசாமல் அரசியலாக்கினர் என்றும், என்டிஏ உறுப்பினர்கள் மசோதாவின் அம்சங்களை ஆக்கப்பூர்வமாக விவாதித்தனர் எனவும் கூறினார். காங்கிரஸ் தரப்பில் பேசியவர்கள் மசோதாவுடன் தொடர்பில்லாத அரசியல் விவகாரங்களில் அதிக கவனம் செலுத்தியது துரதிர்ஷ்டவசமானது எனக்கூறிய அவர், நாடாளுமன்ற நடவடிக்கைகள் நள்ளிரவு வரை தொடர்ந்தது ஒரு நல்ல விஷயம் என தெரிவித்தார்.
ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி விவாதத்தை ஏளனம் செய்ததாக குற்றம்சாட்டிய அவர், ஒரு மசோதா குறித்து விவாதிக்கப்படும்போது அதன் சிறப்பம்சங்கள் மீதே கவனம் செலுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.
மேலும், தொடர்பில்லாத அரசியல் விவாதங்களில் ஈடுபட்டு எதிர்க்கட்சிகள் முக்கியமான வாய்ப்பை வீணடித்துவிட்டதாக கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
















