ஹார்முஸ் ஜலசந்திக்கு மாற்றாக சர்வதேச கச்சா எண்ணெய் வர்த்தகத்துக்கு முக்கிய கடல்பாதையாக பாப் எல்-மண்டேப் ஜலசந்தி உள்ளது. அவ்வழியாக செல்லும் வணிக கப்பல்கள் மீது ஈரானுக்கு ஆதரவாக தாக்குதல் நடத்திவரும் ஹெளதி பயங்கரவாதிகள், அந்த ஜலசந்தியின் முழுக் கட்டுப்பாட்டையும் எடுத்துக்கொள்ள முயற்சித்து வருவது மத்திய கிழக்கில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பெரிம் தீவு, செங்கடலின் நுழைவாயிலில் அமைந்துள்ள ஒரு சிறிய எரிமலைத் தீவாகும். செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் பாப் எல்-மண்டேப் (Bab el-Mandeb) ஜலசந்தியின் மையத்தில் இத்தீவு அமைந்துள்ளது.
பரப்பளவில் மிகச் சிறியதாக இருந்தாலும், சர்வதேச புவிசார் அரசியல் மற்றும் கடல்சார் வர்த்தகத்தில் மிக முக்கிய வியூக மையமாக விளங்குகிறது.
இந்தத் தீவின் அருகில்தான் உலகளாவிய பெரிய சரக்குக் கப்பல்கள் மற்றும் கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்லும் ஆழமான மேற்கு கடல் வழிப்பாதை அமைந்துள்ளது.
ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் மிகக் குறுகிய கடல்வழிப் பாதையான சூயஸ் கால்வாய்க்குச் செல்லும் அனைத்துக் கப்பல்களும் இந்தத் தீவைக் கடந்துதான் செல்ல வேண்டும்.
தினமும் கோடிக்கணக்கான பேரல் கச்சா எண்ணெயும், பில்லியன் டாலர் மதிப்புள்ள சர்வதேச வர்த்தகப் பொருட்களும் இந்தக் கடல் பாதையின் வழியாகவே கொண்டு செல்லப்படுகின்றன.
ஈரான் போர் தொடங்கியதில் இருந்தே ஹார்முஸ் ஜலசந்தி கடல்பாதை பாதுகாப்பற்றதாக ஆன நிலையில் செங்கடல் வழியாக எண்ணெய் ஏற்றுமதியை மேற்கொள்ள பெரிம் தீவின் கடல்பாதை மிக அவசியமான ஒரு பாதையாக மாறியுள்ளது.
உலகளாவிய எரிசக்தி விநியோகம் தடையின்றி தொடரவும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்கவும், சவூதி அரேபியா தனது எண்ணெய் ஏற்றுமதியின் ஒரு பகுதியை ஹார்முஸ் பாதையிலிருந்து செங்கடல் பகுதிக்கு மாற்றியுள்ளது.
எனவே, இத்தீவை தன் வசம் வைத்திருக்கும் அரசால் அல்லது தனி அமைப்பால் ஒட்டுமொத்த சர்வதேச கடல் போக்குவரத்தையும் எளிதாகக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் முடியும் என்று கூறப்படுகிறது.
சொல்லப்போனால் புவியியல் இருப்பிடம் காரணமாக, இத்தீவு ஒரு சிறந்த இராணுவ சாவடியாகவே உள்ளூர் அரசாலும். ஹெளதி பயங்கரவாதிகளாலும் பார்க்கப்படுகிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் கப்பல்கள், இந்தியாவுக்கு வரப் பயன்படுத்தப்பட்ட மிகச் சிறிய பெரிம் தீவைக் கைப்பற்றும் ராணுவ நடவடிக்கைகளை ஹெளதிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
உள்நாட்டுப்போர் நடந்துவரும் யேமனில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக உள்ள பெரிம் தீவுக்கு வடக்கே சுமார் 50 மைல் தொலைவில் அமைந்துள்ள கடற்கரை நகரமான ‘மோச்சா’வை (Mocha) கைப்பற்ற ஹெளதி பயங்கரவாதிகள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.
ஏற்கெனவே யேமனின் தலைநகர், வடமேற்குப் பகுதி மற்றும் பெரிம் தீவுக்கு வடக்கே உள்ள செங்கடல் கடற்கரைப் பகுதியின் பெரும்பகுதி ஹெளதி பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் இத்தீவையும் ஹெளதிகள் கைப்பற்றினால் சர்வதேச நாடுகளுக்குக் கடும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று யேமனின் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசின் துணைத் தலைவர் தாரிக் சலே (Tarik Saleh), எச்சரித்துள்ளார்.
2023ம் ஆண்டு வரை உலகின் கடல்வழி எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 10 சதவீதம் பாப்-எல்-மண்டேப் வழியாகச் சென்ற நிலையில், தாக்குதல்கள் காரணமாக ஈரான் போர் தொடங்கிய பிறகு தற்போது 5 சதவீதம் மட்டுமே நடப்பதாக தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் இடையூறுகள் நீடிப்பதாலும், அமெரிக்கா-ஈரான் போர் நீடித்து வருவதாலும் அரேபியத் தீபகற்பத்தின் மறுமுனையில் உள்ள மற்றொரு முக்கிய கடல் பாதையும் சர்ச்சைக்குரியதாக மாறுவதாலும், சர்வதேச அளவில் எரிசக்தி மற்றும் வணிகப் போக்குவரத்திற்கான பாதுகாப்பான கடல்பாதைகள் குறையும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
















