பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும், அடுத்த 20 ஆண்டுகளுக்கான திட்டத்தை வடிவமைக்க வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி பாரத் மண்டபத்தில் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டினையொட்டி புகழ்பெற்ற ராமேஸ்வரம் கோயில் பிரகாரத்தின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் மாநாட்டிற்கு வந்துள்ள ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்களை, பிரதமர் நரேந்திர மோடி, ராமேஸ்வரம் கோயில் பிரகார புகைப்படத்தின் முன்பு நின்றபடி வரவேற்றார்.
இதைத்தொடர்ந்து பிரிக்ஸ் உச்சிமாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவம் மக்கள் மற்றும் மனிதநேயத்திற்கு முதன்மையளிக்கும் அணுகுமுறையைக் கொண்டது என்று தெரிவித்தார்.
மீள்திறன், புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகியவை இந்தியாவின் முன்னுரிமையாக இருந்து வருவதாகவும் கூறினார்.
இந்த ஆண்டு பிரிக்ஸ் உச்சிமாநாடு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக அமைந்துள்ளதாகவும், பிரிக்ஸ் அமைப்பின் 20-வது ஆண்டு விழாவைக் கொண்டாடுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
குறிப்பிட்ட காலத்துக்குள் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும்,
உலக வங்கி போன்ற நிதி நிறுவனங்களிலும் சீர்திருத்தங்கள் தேவை என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
பிரிக்ஸ் அமைப்பை வலுப்படுத்துவதோடு, உலகளாவிய சீர்திருத்தங்களுக்கான பாதையையும் நாம் வகுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
பிரிக்ஸ் கூட்டமைப்பு யாருக்கும் எதிரானது அல்ல என்றும் கூறினார்.
உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் வளரும் நாடுகள் முதல் வரிசையில் உள்ளதாகவும், ஆனால் முடிவெடுக்கும் அதிகாரத்தில் வளரும் நாடுகள் கடைசி வரிசையில் தள்ளப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும், அடுத்த 20 ஆண்டுகளுக்கான திட்டத்தை வடிவமைக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.
















