அமெரிக்க அதிபா் ட்ரம்பின் மார்-ஏ-லாகோ எஸ்டேட்டில் அத்துமீறி துப்பாக்கியுடன் நுழைந்த 21 வயது இளைஞரைப் பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். மார்-ஏ-லாகோவில் என்ன நடந்தது? யார் அந்த இளைஞர் ? என்ன காரணத்துக்காக ட்ரம்பை கொலைசெய்ய வந்தார் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள அதிபர் ட்ரம்பின் மார்-ஏ-லாகோ எஸ்டேட் இல்லத்துக்குள், துப்பாக்கி மற்றும் பெட்ரோல் கேனிஸ்டருடன் 21 வயதுடைய இளைஞர் அத்துமீறி நுழைந்துள்ளார்.
அதைப் பார்த்த பாதுகாப்பு அதிகாரிகள் துப்பாக்கியையும், பெட்ரோல் கேனிஸ்டரையும் கீழே போட்டுவிட்டு அந்த இளைஞரைச் சரணடையுமாறு தெரிவித்தனா்.
தாம் சிக்கிக்கொண்டதை உணர்ந்த அந்த இளைஞர், கேனிஸ்டரை கீழே வைத்தபோது பாதுகாப்பு அதிகாரிகளை நோக்கி சுடுவதற்காக தனது துப்பாக்கியால் குறிவைத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தங்களை தற்காத்துக்கொள்ளும் வகையில் அந்த இளைஞரை பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.
இந்த சம்பவம் நடைபெற்றபோது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் புளோரிடா எஸ்டேட்டில் இல்லாமல் வெள்ளை மாளிகையில் இருந்தனர் என்று கூறப்படுகிறது.
ட்ரம்பின் மார்-ஏ-லாகோ எஸ்டேட் இல்லத்துக்குள், அத்துமீறிய இளைஞர் வடக்கு கரோலினாவைச் சோ்ந்த 21 வயதான ஆஸ்டின் டக்கர் மாா்டின் என்று அடையாளம் காணப் பட்டுள்ளது. எதற்காக அவா் அதிபரின் இல்லத்துக்குள் நுழைந்தாா் என்ற தகவல் வெளியாகவில்லை.
வடகரோலினாவில் உள்ள மார்டினின் குடும்பத்தினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இருந்தே மார்ட்டின் காணாமல் போனதாக புகார் அளித்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
2023-ல் கேமரூனில் உள்ள யூனியன் பைன்ஸ் உயர்நிலைப் பள்ளி படிப்பை முடித்த மார்டின் கடந்த ஜூன் மாதம் ‘ஃப்ரெஷ் ஸ்கை இல்லஸ்ட்ரேஷன்ஸ்’ என்ற பெயரில் ஒரு வணிக நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.
“கோல்ஃப் மைதானக் காட்சிகளை விளக்குவதன் மூலமும், பல்வேறு கோல்ஃப் மைதான பரிசுக் கடைகளில் கையால் செய்யப்பட்ட படைப்புகளின் நகல்களை வழங்குவதன் மூலமும் கோல்ஃப் மைதானத்தில் இருப்பது போன்ற நம்பிக்கையான உணர்வை உயிர்ப்பிக்கும் ஒரு கலைப்படைப்பு நிறுவனமாகும்.
தொடர்ந்து தான் வரைந்த வரைபடங்களை தனது முகநூலில் பதிவிட்டு வந்துள்ளார். கடந்த வியாழக் கிழமையில் தனது கடைசி வரைப்படத்தைப் பதிவேற்றியுள்ளார்.
பதிவு செய்யப்பட்ட வாக்காளரான மார்டின் எந்தக் கட்சி சார்பையும் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை என்றாலும், மார்ட்டினின் உறவினர்கள் அவரை ட்ரம்ப் ஆதரவாளர் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும்,உள்ளூர் கோல்ஃப் மைதானத்தில் பணிபுரிந்த மார்டின் தனது சம்பளத்தில் ஒரு பகுதியை தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பியதாகவும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே மார்ட்டினுடன் பணிபுரியும் சக ஊழியர்கள், எப்ஸ்டீன் பைல்ஸ் குறித்து சக்திவாய்ந்த நபர்கள் தப்பித்து விடுகிறார்கள் என்று மார்டின் விரக்தியில் இருந்ததாக கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அதிபரைத் தொடர்பு கொண்டதாகவும், விசாரணைகள் ஒருங்கிணைந்து நடத்தப்பட்டு வருவதாகவும் அட்டர்னி ஜெனரல் பமீலா பாண்டி தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து ட்ரம்புடன் பேசியதாக கூறியுள்ள அமெரிக்க கருவூல் செயலாளர் (Scott Bessent) ஸ்காட் பெசென்ட், அதிபரையும் அவரது குடும்பத்தினரையும் பாதுகாத்த FBI அதிகாரிகளுக்கு பெசென்ட் நன்றி தெரிவித்துள்ளார்.
அதிபர் ட்ரம்ப் எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில், FBI அதிகாரிகளின் விரைவான நடவடிக்கையை வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் Karoline Leavitt கரோலைன் லீவிட் பாராட்டியுள்ளார்.
ஏற்கெனவே 2024 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போதே ட்ரம்ப் மீது கொலை முயற்சி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பிரச்சாரத்தில் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் அப்போதே பாதுகாப்பு அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இரண்டாவது முறை ட்ரம்ப் கோல்ப் விளையாடி கொண்டிருந்த போது எஸ்டேட்டில் நுழைந்த ரூத் என்ற நபர் ட்ரம்ப் மீது சுடுவதற்குள், பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி, அவரைப் பிடித்தனர். கடந்த ஆண்டு குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ரூத்துக்கு இந்த மாதம் தான் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த புதன் கிழமை, அமெரிக்க கேபிடல் கட்டிடத்தின் மேல் துப்பாக்கியுடன் சென்ற ஒரு மர்ம நபரை வாஷிங்டன் காவல் துறையினர் கைது செய்தது குறிப்பிடத் தக்கது.
















