கச்சா எண்ணெய் இறக்குமதியை தாண்டி, ரஷ்யாவுடனான பொருளாதார உறவை அனைத்து துறைகளிலும் வலுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அத்துடன், ரஷ்யாவில் 70 ஆயிரம் இந்திய இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பையும் உருவாக்கியுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
இந்தியாவின் மிக நெருங்கிய நட்பு நாடுகள் எவை என்று ஒரு பட்டியலிட்டால், அதில் ரஷ்யா முதன்மை இடத்தை பிடிக்கும். இந்திய சுதந்திரமடைந்த காலம் முதலே இரு நாடுகள் இடையே நல்லுறவு நீடித்து வருகிறது. தற்போது அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி அந்த உறவு தொடர்ந்து வருகிறது.
இந்த சூழலில், நடப்பாண்டில் மட்டும் சுமார் 70,000 இந்திய தொழிலாளர்களை தங்கள் நாட்டில் பணியமர்த்திக்கொள்ள ரஷ்யா முன்வந்துள்ளது. இந்த தொழிலாளர்கள் ரஷ்யாவில் கட்டுமானத் துறைகளிலும், Logistics Sector எனப்படும் தளவாட மேலாண்மைத் துறையிலும் பணியாற்றுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், அந்நியச் செலாவணி வரத்தும் அதிகரிக்கவுள்ளது.
வேலைக்கு ஆட்களை அனுப்புவதோடு நின்றுவிடாமல், ரஷ்யாவுடனான உறவில் மிக முக்கியமான வர்த்தக நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இன்றைய தேதிக்கு இந்திய-ரஷ்ய வர்த்தக உறவில் கச்சா எண்ணெய்தான் பிரதான இடம் வகிக்கிறது. இந்த கச்சா எண்ணெய் வர்த்தகம் மூலம் ரஷ்யாதான் அதிக அனுகூலத்தை அடைகிறது.
புள்ளிவிவரங்களை கொண்டு இதை விளக்குவது என்றால், 2025-26 நிதியாண்டில் இரு நாடுகளுக்கும் இடையே சுமார் 5 லட்சம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இதில், 4 லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்துள்ளது. இதில், கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் மதிப்பு மட்டும் 3 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயாகும்.
பதிலுக்கு, வெறும் 37 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மட்டும்தான் இந்தியாவில் இருந்து ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்த பிரம்மாண்ட வர்த்தக ஏற்றத்தாழ்வை சரிசெய்து, இந்திய பொருட்களை அதிகளவில் ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தற்போது முயற்சி மேற்கொண்டு வருகிறது.
2030ஆம் ஆண்டிற்குள் இந்தியா – ரஷ்யா இடையேயான இருதரப்பு வர்த்தகத்தை 100 பில்லியன் டாலராக உயர்த்த அண்மையில் முடிவு செய்யப்பட்டது. இரு நாடுகளும் தலா 50 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்த இலக்கை எட்டும் வகையில், பொறியியல் சார்ந்த பொருட்கள், மருந்துகள், ரசாயனங்கள், மோட்டார் வாகனங்கள், உணவுப் பொருட்கள், கடல்சார் பொருட்கள் ஜவுளி ஆகிய 7 முக்கியத் துறைகளில் ஏற்றுமதியை அதிரடியாக உயர்த்த மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது.
அண்மையில் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் தடை விதித்ததால், அந்நாடுகளில் இருந்து ரஷ்யாவுக்கு பல்வேறு பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவது தடைபட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திகொண்டு, ரஷ்யாவுக்கு தேவையான பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்தியாவுக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏற்கனவே இந்திய மருந்துகள் மற்றும் பொறியியல் பொருட்களுக்கு ரஷ்யாவில் நல்ல வரவேற்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க டாலருக்குப் பதிலாக ரூபாய் மற்றும் ரூபிள் மூலமாகவே பணப்பரிவர்த்தனை செய்யும் முறை நடைமுறைக்கு வந்துள்ளதால், மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடை இருநாடுகள் இடையேயான வர்த்தகத்திற்கு பெரிய தடங்கலாக இருக்காது.
இப்படி, ரஷ்யா உடனான வர்த்தகத்தை அதிகரிக்கவும், இந்தியர்களுக்கு ரஷ்யாவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன், ரஷ்யாவில் பணிபுரியச் செல்லும் இந்தியர்களின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்யவும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
















