அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை 3.75 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை வரை மாற்றாமல் வைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் சர்வதேச தங்கச் சந்தையில் அடுத்தகட்டமாக என்ன மாற்றம் வரும் ? இந்தியாவில் தங்கத்தின் விலை குறையுமா ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அமெரிக்காவில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதையும் பொருளாதார வளர்ச்சியை சமநிலைபடுத்தவும் மத்திய வங்கி வட்டி விகிதங்களில் மாற்றங்களைக் கொண்டு வருவது வழக்கம்.
அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைக்கப்படும்போது டாலரின் மதிப்பு பலவீனமடைவதால் தங்கம் பாதுகாப்பான முதலீடாக மாறும். எனவே, சர்வதேச அளவில் தங்கத்தின் விலை அதிகரிக்கும்.
அதுவே வட்டி விகிதத்தை அமெரிக்க மத்திய வங்கி அதிகரிக்கும் போது முதலீட்டாளர்கள் வட்டி தரும் பத்திரங்கள் மற்றும் வைப்பு தொகைகளில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவார்கள். இதனால் தங்கம் மீதான முதலீடு குறைந்து, தங்கத்தின் விலை குறையும்.
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லாத போது தங்கம் விலை பெரிதாக ஏற்ற இறக்கம் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் இருக்கும்.
இந்நிலையில், இரண்டு நாட்கள் நடந்த அமெரிக்க நிதிக் கொள்கை கூட்டத்தின் முடிவில் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என அறிவித்துள்ளது. மேலும் தனது வட்டி விகிதத்தை 3.75 முதல் 4.00 சதவீதம் என்ற அளவிலேயே தொடர்வதாக தெரிவித்துள்ளது.
எதிர்பார்த்த இலக்கை விட பணவீக்கம் இன்னும் அதிகமாக இருப்பதால், இப்போதைக்கு வட்டி விகிதத்தை குறைக்கும் எண்ணம் இல்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள ஃபெடரல் தலைவர் கெவின் வார்ஷ், சந்தை நிலைமைகள் மற்றும் நுகர்வோர் விலை தரவுகளை பொறுத்தே அடுத்தடுத்த கூட்டங்களில் முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இதன் விளைவாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,074 டாலர்கள் வரை உயர்ந்து பின்னர் 4,036 டாலர்கள் வரை சரிவை கண்டுள்ளது. எனவே இந்திய சந்தையிலும் தங்கம் விலை சற்று உயர வாய்ப்புள்ளது.
வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்துள்ள அமெரிக்க மத்திய வங்கியின் முடிவு தங்க சந்தையில் உடனடியான சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறமுடியாது. வருங்காலத்தில் வட்டி விகிதம் குறைக்கப்படுமா? கூட்டப் படுமா? என்பதைப் பொறுத்தே சர்வதேச தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
தங்கச் சந்தையில் தற்போதைய கவனம் வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ள நிதிக் கொள்கை கூட்டத்தின் முடிவின் மீது திரும்பியுள்ளது.
அமெரிக்காவில் பணவீக்கம் எதிர்பார்த்த அளவுக்குக் குறையாமல் தொடர்ந்து உயரும் நிலையில் வட்டி விகிதங்கள் கூட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை சர்வதேச சந்தையில் தங்கம் அவுன்ஸ் 3,250 டாலராக சரிந்தால், இந்தியாவில் 24 கேரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு சுமார் 98,000 ரூபாய் வரை குறையக்கூடும் என கணக்கிடப்படுகிறது.
சர்வதேச சந்தை விலை சரிந்த போதிலும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, மத்திய அரசு விதிக்கும் இறக்குமதி வரிகள் மற்றும் உள்ளூர் சந்தை தேவைகள் என பல காரணங்கள் நாட்டில் தங்கத்தின் விலையைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நகைகளாக வாங்கும் போது செய்கூலி, சேதாரம் மற்றும் ஜி.எஸ்.டி வரிகள் கூடுதலாக சேர்க்கப்படும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.
சர்வதேச சந்தையின் வீழ்ச்சிக்கு ஏற்ப இந்தியச் சந்தையிலும் மாற்றம் ஏற்பட்டால், 8 கிராம் எடையுள்ள 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 72,000 என்ற நிலைக்கு இறங்கி வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இவை முற்றிலும் சந்தைக் கணிப்புகள் மட்டுமே என்றும் கூறப்படுகிறது.
விலை ஏற்ற இறக்கத்தில் இருக்கும் சூழலில், மொத்த தேவைக்கான தங்கத்தையும் ஒரே நேரத்தில் வாங்குவதற்கு பதிலாக, தேவைக்கேற்ப படிப்படியாக வாங்குவது, விலை மாற்றத்தால் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
















