சுதந்திரப் போராட்ட வீரர் பாலகங்காதர் திலகரின் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் அவரது நினைவு நாளில் லோக் மான்ய திலக் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. அவரின் 103-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, நாடு முன்னேற்ற படிக்கட்டுகளில் ஏற உதவிய ஆத்ம நிர்பார் கருத்துக்காகவும், தேசிய உணர்வை எழுப்பியதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு லோக்மான்ய திலக் விருது வழங்கப்படும் என்று திலகர் நினைவு அறக்கட்டளை அறிவித்திருந்தது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடிக்கு லோக் மான்ய திலக் தேசிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இவ்விருதை பெற்றுக் கொண்டுப் பேசிய பிரதமர் மோடி, “இது எனக்கு மறக்க முடியாத தருணம். இந்த மதிப்புமிக்க விருதை இன்று நான் பெறும்போது, உற்சாகமாகவும் உணர்ச்சி மிக்கவனாகவும் இருக்கிறேன். இந்தியாவின் சுதந்திரத்தில் லோகமான்ய திலகரின் பங்களிப்பை ஒரு சில சம்பவங்கள் மற்றும் வார்த்தைகளில் சுருக்கிவிட முடியாது” என்றார்.
மேலும், லோக் மான்ய திலக் விருதை நாட்டிலுள்ள 140 கோடி மக்களுக்கும் அர்ப்பணிப்பதாகக் கூறிய பிரதமர் மோடி, பரிசுத் தொகையை தூய்மை கங்கை திட்டத்துக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்தார். நிகழ்ச்சியில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர ஃபட்னாவீஸ், அஜித் பவார் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டு, சரத் பவாரின் சகோதரர் மகன் அஜித் பவார், தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களோடு, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்து துணை முதல்வராகி இருக்கிறார். இந்த சூழலில், சரத் பவார் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.