2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் முன்னாள் எம்.பி.யுமான ராகுல் காந்தி, எல்லா திருடர்களுக்கும் மோடி என்கிற பொதுவான பெயர் இருப்பது எப்படி என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதையடுத்து, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி, ராகுல் காந்தி மீது சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும், 15,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இதன் காரணமாக, ராகுல் காந்தி எம்.பி. பதவியை இழந்தார்.
இதைத் தொடர்ந்து, தீர்ப்பை ரத்து செய்யக்கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த குஜராத் நீதிமன்றம் தண்டனையை ரத்து செய்ய மறுத்து விட்டது.
தண்டனையை ரத்து செய்யக்கோரி ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேற்கண்ட மனுவுக்கு பதிலளிக்குமாறு குஜராத் அரசுக்கும், வழக்குத் தொடர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடிக்கும் உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, புர்னேஷ் மோடி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், “ஒரு சமூகத்தின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத, ஆணவ குணம் கொண்ட ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்காமல், அவரது மேல்முறையீட்டு மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த பதில் மனுவுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் ராகுல் காந்தி தரப்பில் மறுபிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், “ஐ.ஏ.என்.எஸ். கட்டுரையின் வாட்ஸ் ஆப் ஸ்கிரீன் ஷாட்டில் இருந்து தங்களுக்குச் சாதகமான பாயின்ட்களை மட்டும் எடுத்துக் கொண்டு வழக்கை சித்தரித்திருக்கிறார்கள். ஆனால், அந்த வாட்ஸ் ஆப் செய்தியின் ஆதாரத்தை வெளியிட மனுதாரர் தவறிவிட்டார். தவிர, நீரவ் மோடி, லலித் மோடி போன்ற குடும்ப பெயர்கள் ஒரே சமூகத்தையோ, ஜாதியையோ குறிப்பதில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக, ராகுல் காந்தி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்லாது, எதிர்க்கட்சியின் தலைவர். அந்த வகையில், ஆளும் அரசின் நடத்தை மற்றும் செயல்திறனை விமர்சிப்பது எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு வழக்கமான ஒன்றுதான். ஆகவே, ராகுல் காந்திக்கு அளிக்கப்பட்ட தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது. மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால் அதை ராகுல் காந்தி எப்போதோ செய்திருப்பார். எனவே, மேற்கண்ட அவதூறு வழக்கு தொடர்பாக ராகுல் காந்தி ஒருபோதும் மன்னிப்புக் கேட்கப் போவதில்லை.
மேலும், தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைப்பதால், புகார்தாரரான பா.ஜ.க. எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடிக்கு ஏற்படப்போகும் பாதிப்பு குறித்து பதில் மனுவில் தெளிவாக இல்லை. எனவே, தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்கும் வகையிலும், எதிர்வரும் கூட்டத்தொடரில் பங்கேற்கும் வகையிலும் மேல்முறையீடு மனுவை விசாரித்து முடிக்கும் வரை ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.