பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு உந்துசக்தியாக இருக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, தே.ஜ. கூட்டணி கட்சி எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார்.
இந்நிலையில், பிகார் மாநிலத்தைச் சேர்ந்த கூட்டணி கட்சி எம்.பி.க்களுடன் அவர் வியாழக்கிழமை கலந்துரையாடினார். அப்போது, அவா் கூறியதாவது: மக்களவைத் தோ்தலுக்கு இடையே உள்ள காலத்தை தே.ஜ. கூட்டணி எம்.பி.க்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். தங்களது தொகுதியில் பெருமளவிலான மக்களைச் சந்தித்து, மத்திய அரசு மேற்கொண்ட மேம்பாட்டு பணிகள் குறித்து அவர்களிடம் விளக்க வேண்டும்.
பாஜக 2014-இல் ஆட்சிக்கு வந்தபோது, மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி, தொடக்கத்தில் இருந்தே நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு உந்துசக்தியாக இருந்து வருகிறது என்றார் அவா்.