டெல்லி நிர்வாக சீர்த்திருத்த மசோதா தொடர்பாக, தேர்வுக்குழுவுக்கு அனுப்பும் முன்மொழிவில் ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், போலி கையெழுத்து போட்டியிருப்பதாக புகார் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் கடந்த 20-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்தாலும், திட்டமிட்டப் படி மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன. அந்த வகையில், டெல்லி நிர்வாக சீர்த்திருத்த மசோதா மீதான விவாதம் மாநிலங்களவையில் நேற்று நடந்தது. அப்போது, மேற்கண்ட மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், இம்மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பும் முன்மொழிவை, ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சத்தா கொண்டு வந்தார்.
இந்த முன்மொழிவில், பா.ஜ.க.வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதன்ஷு திரிவேதி, நர்ஹரி அமீன், பி கொன்யாக், பிஜூ ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் சஸ்மித் பத்ரா மற்றும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த உறுப்பினர் தம்பிதுரை ஆகியோர் கையெழுத்திட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சூழலில், மேற்கண்ட முன்மொழிவில் தான் கையெழுத்துப் போடவில்லை என்று கூறியிருக்கும் தம்பிதுரை, மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்குப் புகார் கடிதம் அனுப்பி இருக்கிறார்.
அதேபோல, பா.ஜ.க. மற்றும் பிஜூ ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்களும் தங்களது பெயர்கள் முறைகேடாக சேர்க்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார்கள். இதனால், போலி கையெழுத்து போட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. ராகவ் சத்தா மீது புகார் எழுந்திருக்கிறது.