சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது மத்திய புலனாய்வு அமைப்பின் தீவிரவாத எதிர்ப்புப் பிரிவு புதிதாக ஒரு வழக்கு பதிவு செய்திக்கின்றனர். இதனால் இம்ரானுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
2018 முதல் 2022-ம் ஆண்டு வரை பாகிஸ்தான் பிரதமராக இருந்தவர் பிரபல கிரிக்கெட் வீரர் இம்ரான் கான். இவரது தெஹ்கீர் இ இன்சாப் கட்சியுடன் கூட்டணியில் இருந்த முக்கிய கட்சி ஒன்று, எதிர்க்கட்சியோடு கூட்டணி சேர்ந்தது. இதனால், இம்ரான் கானின் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டது. இதையறிந்த இம்ரான் கான், கடந்தாண்டு மார்ச் மாதம் தனது அரசை கவிழ்க்க சர்வதேச சதி நடப்பதாகவும், அமெரிக்காவின் ஆதரவு பெற்ற கும்பல் இந்த சதிக்குக் காரணமாக இருப்பதாகவும் கூறி, ஒரு கடிதத்தைக் காட்டினார்.
இதன் பிறகு நடந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மூலம் இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது. பின்னர், இம்ரான் கான் மீது ஊழல், மோசடி, கொலை மிரட்டல் உட்பட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், அவர் பிரதமராக இருந்தபோது கிடைத்த விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை அரசு கஜானாவில் சேர்க்காமல், மோசடி செய்ததாக தோஷகானா ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சூழலில், அமெரிக்க தூதரகத்தின் இராஜதந்திர கேபிளின் உள்ளடக்கத்தை பொதுவெளியில் அம்பலப்படுத்தியதாக, மத்திய புலனாய்வு அமைப்பின் (எஃப்.ஐ.ஏ.) தீவிரவாத எதிர்ப்புப் பிரிவு கடந்தாண்டு ஏப்ரல் மாதம், இம்ரான் கான் மீது வழக்குப் பதிவு செய்தது.
இதனிடையே, தோஷகானா ஊழல் வழக்கில் இம்ரானுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, பஞ்சாப் மாகாணத்திலுள்ள அட்டாக் சிறையில் அவர் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், மத்திய புலனாய்வு அமைப்பின் (எஃப்.ஐ.ஏ.) கூட்டு விசாரணைக் குழு, கடந்த சில தினங்களுக்கு முன்பு அட்டாக் சிறைக்குள் சென்று இம்ரான் கானிடம் விசாரணை நடத்தியது.
மேலும், அவரது முதன்மைச் செயலாளர் ஆசம் கானிடமும் எஃப்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர், நீதிபதி முன்பும், எஃப்.ஐ.ஏ. முன்பும் கூறுகையில், தனது அரசியல் ஆதாயங்களுக்காகவும், நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பை தடுக்கவும், அமெரிக்க சைபரை இம்ரான் கான் பயன்படுத்தியதாகக் கூறினார். இதைத் தொடர்ந்து, இம்ரான் கான் மீது, அதிகாரப்பூர்வ இரகசிய சட்டத்தின் கீழ் எஃப்.ஐ.ஏ. வழக்குப் பதிவு செய்திருக்கிறது. இதனால், இம்ரான் கானுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.