தென்கொரியா மற்றும் அமெரிக்கா இடையேயான கூட்டு ராணுவப் பயிற்சிக்குப் பதிலடியாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் கற்படை பிரிவுக்குச் சென்று போர்க்கப்பலின் ஏவுகணை சோதனையை மேற்பார்வையிட்டார்.
இந்த ஏவுகணை சோதனையானது கப்பலின் செயல்பாடு மற்றும் அதன் சிறப்பம்சத்தைச் சரிபார்ப்பதை நோக்கமாகக் கொண்டது. அதேநேரத்தில் போரின் போது தாக்குதல் பணியை மேற்கொள்ளும் வீரர்களின் திறனை மேம்படுத்துகிறது.
கோடைக்கால பயிற்சிகளைத் திங்களன்று தென்கொரியாவும், அமெரிக்காவும் தொடங்கிய நிலையில் சமீபத்திய ஏவுகணை சோதனையை வடகொரியா செய்துள்ளது. கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையானது அதன் இலக்கின் மீது சரியாக தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தென் கொரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் ஏவுகணை ஏவப்பட்டதற்கான அறிகுறிகளைக் கண்டறிந்ததாகத் தெரிவித்துள்ளது.
தென் கொரியாவின் இராணுவம் இந்த ஆண்டில் எப்போதும் இல்லாத அளவில் பயிற்சி நடத்தும் என்று கூறியுள்ளது.
தீவிரவாதம், ட்ரோன் தாக்குதல்கள் உள்ளிட்ட பல காரணங்களுக்காக இந்தப் பயிற்சிகள் நடத்தப்படுகிறது என்று அந்நாட்டின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
வடகொரியா கடந்த சில ஆண்டுகளாக ஏவுகணைச் சோதனைகள் மற்றும் கடற்படை சக்தியை நவீனமயமாக்குதல், மேம்பட்ட போர் திறன், மேற்பரப்பு மற்றும் நீருக்கடியில் தாக்குதல் மற்றும் தற்காப்பு திறன்களின் முழு நவீன வழிமுறைகளுடன் கடற்படையை வலுப்பத்துவதாக கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். அதேவேளையில் வடகொரியா கடந்த மார்ச் மாதம் ஒரு புதிய அணுசக்தி திறன் கொண்ட கடலுக்கடியில் தாக்குதல் நடத்தக் கூடிய ட்ரோனைக் காட்சிப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.