ஆருத்ரா நிதி நிறுவன மோசடி விவகாரத்திற்கும், எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும், இந்த விவகாரத்தில் தன் மீது யார் அவதூறு பரப்பினாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக பா.ஜ.க விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக பா.ஜ., விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி விளக்கம் அளித்துள்ளார். அதில், ஆருத்ரா வழக்கில் எனக்குத் தொடர்பு உள்ளதாக, சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நர்மதா நந்தகுமார் என்பவர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் தெரிவித்துள்ளதாகவும், அது குறித்து விசாரித்து அறிக்கை அனுப்ப மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. முகம் தெரியாத நபருக்காகக் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்வம் காட்டுவது ஏன்? எனத் தெரியவில்லை.
பா.ஜ.கவில் பல கோடி உண்மையான தொண்டர்கள் உள்ள நிலையில், அதில், ஒரு சாதாரணத் தொண்டர்களுள் ஒருவனான நான் உள்ளேன். நான், தமிழகத்தில் ஆளும் தி.மு.கவுக்கு எதிராகப் போராடி வருகின்றேன். பொய் புகாரின் பேரில். என்னை அரசியலில் முடக்கும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் செயல்படுவதாகவே தெரிகிறது.
ஒரு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தினமும் பல நூறு மனுக்கள் வரும், அதை அவர்கள் வெளியே சொல்வதில்லை. அப்படி இருக்கும்போது, இதை மட்டும் குறிப்பிட்டு சொல்வதின் நோக்கம் என்ன?
நந்தகுமார் என்பவர் உண்மையிலேயே சமூக ஆர்வலரா? என்பது யாருக்கும் தெரியாது. என் மீதான திட்டமிட்ட பொய் புகாரின் பேரில் உத்தரவிடப்பட்ட விசாரணைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வரும் காலத்தில் பதில் சொல்லவேண்டி இருக்கும். எனவே, இந்த விவகாரத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆருத்ரா நிதி நிறுவனத்திற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை, இது தொடர்பாக பல முறை தெளிவாக விளக்கம் அளித்துவிட்டேன். தொடர்ந்து யாராவது அவதூறு பரப்பினால் அவர்கள் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என அமர் பிரசாத் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.