போதைப் பொருள் விநியோகச் சங்கிலி தடுக்கப்பட வேண்டும் என்று தேசியப் பாதுகாப்பு மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தி இருக்கிறார்.
உள்நாட்டுப் பாதுகாப்பு, தீவிரவாதம் உட்பட முக்கியப் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதிப்பது தொடர்பான தேசியப் பாதுகாப்பு மாநாடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் நேற்று தொடங்கியது.
2 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 750-க்கும் மேற்பட்ட காவல்துறையைச் சேர்ந்த உளவுப் பிரிவு அதிகாரிகள், மூத்த பாதுகாப்பு அதிகாரிகள், பாதுகாப்புத்துறை நிபுணர்கள் ஆகியோர் காணொளி வாயிலாகவும், நேரடியாகவும் பங்கேற்கிறார்கள்.
தேசியப் பாதுகாப்பு மாநாட்டைத் தொடங்கிவைத்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “நாட்டின் பாதுகாப்புக்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அனைத்து விதமான தேசியப் பாதுகாப்பு வழிமுறைகளையும் வலுப்படுத்தும். குறிப்பாக, போதைப் பொருள் கடத்தலைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
ஆகவே, போதைப் பொருள் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், போதைப் பொருள் விநியோகச் சங்கிலி முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும். உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் மாவட்டக் காவல் அதிகாரிகளுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. விசாரணைகளில் அறிவியல்பூர்வ தொழில்நுட்பத்தைக் காவல்துறை அதிகாரிகள் பயன்படுத்த வேண்டும்” என்று கூறினார்.
இம்மாநாடு குறித்து உள்துறை அமைச்சத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “நாட்டில் தேசிய அளவிலான பாதுகாப்புக்கு ஏற்படும் சவால்களை, காவல்துறைத் தலைவர்கள், நிபுணர்கள், உயரதிகாரிகள் ஒன்று சோந்து எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து இம்மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
முதல் நாள் மாநாட்டில், உள்நாட்டுப் பாதுகாப்பு, பயங்கரவாதம், போதைப் பொருள்களுக்கான சட்டவிரோத நிதிப் பரிமாற்றந்தைத் தடுப்பது, சமூக ரீதியிலான சவால்கள், அணுசக்தி மற்றும் கதிரியக்கத் தாக்குதலின்போது கையாள வேண்டிய அவசரக் கால நடவடிக்கைகள், இணையவழிப் பாதுகாப்பு, விசாரணைகளில் தடய அறிவியல் சோதனையின் பயன்பாடு ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டன.