கூடங்குளத்தில் 3 மற்றும் 4-வது அணு மின் நிலைய பணிகள் மூழு வீச்சில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் தென் மாவட்டம் என அழைக்கப்படும் திருநெல்வேலி மாவட்டத்தில் கூடங்குளத்தில், இந்திய அணு மின் கழகம், ரஷ்யா உதவியுடன் தலா 1,000 வாட் மின்சாரம் தயாரிக்கும் பணியைத் தொடங்கியுள்ளது. இவ்வாறு உற்பத்தியாகும் மின்சாரத்தில், தமிழகத்திற்குத் தினமும் 1,152 வாட் மின்சாரம் ஒதுக்கப்படும். மீதியுள்ள மற்ற மின்சாரம் பிற மாநிலங்களுக்குப் பிரித்து வழங்கப்படும்.
இந்த நிலையில், கூடங்குளம் 3-வது மற்றும் 4-வது அணு மின் உலைகள் அமைக்கும் பணிகள், கடந்த 2016-2017-ம் ஆண்டு ரூ.39,849 கோடி செலவில் துவங்கப்பட்டது. இந்த நிலையில், 3-வது அணு மின் உலை பணிகள் அனைத்தும் முடியும் தருவாயில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அணு உலை கட்டிடம், உள் மற்றும் வெளிப்புற சுவர், அணு உலைகளைக் குளிர்விக்கும் குழாய்கள், கட்டுப்பாட்டு மற்றும் பாதுகாப்புக் கருவிகள் அமைக்கும் பணிகள், பிரமாண்ட கிரேன் அமைக்கும் பணி உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்துவிட்டது.
இதனைத்தொடர்ந்து, மின் உற்பத்தி தொடங்கும் பணி குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதேபோல், 4-வது அணு மின் உலை கட்டும் பணிகளும் வேகம் எடுத்துள்ளன.
கூடங்குளம் அணு உலை பணிகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணு மின் கழக உயர் அதிகாரி ஒருவர், ரஷ்யா – உக்ரைன் போர் நடைபெற்று வந்தாலும் கூட, நமக்கு தேவையான அணு மின் உலைக்கான கருவிகள் அனைத்தும் ரஷ்யாவிடம் இருந்து பெற்று, கட்டிட பணிகள் அனைத்தும் முடித்துவிட்டோம். அடுத்த கட்டமாக மின் உற்பத்தியை நோக்கி சென்று கொண்டுள்ளோம் என்றார்.
இதனிடையே, கூடங்குளத்தில் 5 மற்றும் 6-வது அணு மின் உலை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.