மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக, அம்மாநில முதல்வர் பைரேன் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார்.
மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, இட ஒதுக்கீடு தொடர்பாக கூகி சமூகத்தினருக்கும், மெயிட்டி சமூகத்தினருக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. இந்த சூழலில், மெயிட்டி சமூகத்தினரையும் பழங்குடியின பட்டியலில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, மத்திய அரசு பரிசீலிக்கலாம் என்று கடந்த மே மாதம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து, கடந்த மே மாதம் 3-ம் தேதி முதல் மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். மியான்மர் நாட்டிலிருந்து ஊடுருவிய சமூக விரோதிகளே மிகப்பெரிய வன்முறைக்குக் காரணம் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டு வருகிறது. அதேசமயம், மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன.
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் பேசிய பாரதப் பிரதமர் மோடி, மணிப்பூர் மக்களுடன் ஒட்டுமொத்த நாடே நிற்கிறது. மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்துவதுதான் அனைத்து பிரச்னைகளுக்கு தீர்வு என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக, அம்மாநில முதல்வர் பைரேன் சிங், நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். அப்போது, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவும் உடன் இருந்தார். சந்திப்பின்போது, அமித்ஷாவும், நட்டாவும், மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து முதல்வர் பைரேன் சிங்கிடம் எடுத்துக் கூறியதாகத் தெரிகிறது.