2024 மக்களைத் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பா.ஜ.க. தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கி இருக்கிறது. 2019 மக்களவைத் தேர்தலைப் போலவே, மிகப் பெரிய வெற்றியைப் பெறுவதற்காக பா.ஜ.க. முடிவு செய்திருக்கிறது.
இதற்காக, வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம் என்ற அஸ்திரத்தை கையில் எடுத்திருக்கிறது. முதலில் மாநில அளவிலான சட்டமன்றத் தேர்தலில் இதே யுத்தியை பா.ஜ.க. கையில் எடுத்தது. இது நல்ல பலனைக் கொடுக்கவே, தற்போது தேசிய அளவிலான பிரசாரத்தை முன்னெடுத்திருக்கிறது.
இந்த வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரத்தின்போது, 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களைக் கண்டறிந்து வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது, இடம் பெயர்ந்த வாக்காளர்களைக் கண்டறிந்து சேர்ப்பது, உயிரிழந்த, சந்தேகத்திற்குரிய மற்றும் போலி வாக்காளர்களை நீக்குவது, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட விவகாரங்களை சரிபார்த்தல் ஆகிய பணிகளைப் பா.ஜ.க.வினர் மேற்கொள்வார்கள்.
இதற்காக பூத் கமிட்டி வரை குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இப்பிரசாரத்தின்போது பா.ஜ.க.வினர் வீடு வீடாகச் சென்று இளைஞர்களை தொடர்புகொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதை உறுதி செய்வார்கள்.
மேலும், இப்பிரசாரத்தின்போது மாநகராட்சி பகுதிகளில் குறைந்தபட்சம் 20,000 வாக்காளர்களையும், நகராட்சி பகுதிகளில் 10,000 வாக்காளர்களையும், ஒன்றியப் பகுதிகளில் 5,000 வாக்காளர்களையும் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்த பிரசாரப் பொறுப்பு, பா.ஜ.க. இளைஞர் அணியினர் மற்றும் மகளிர் அணியினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இப்பணியை கவனிப்பதற்காக பா.ஜ.க. இணைப் பொதுச்செயலாளர் (அமைப்பு) சிவபிரகாஷ் தலைமையில் 8 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டிருக்கிறது.
இக்குழுவில் பா.ஜ.க. தேசியப் பொதுச்செயலாளர்கள் குமால் சஞ்சய் பாண்டே, துஷ்யந்த் கவுதம், துணைத்தலைவர்கள் லஷ்மிகாந்த் வாஜ்பாய், ரேகா வர்மா, தேசியச் செயலாளர்கள் சத்யகுமார், காமகிய பிரசாத் தாசா, பாரதிய கிஷான் மோர்ச்சா தலைவர் ராஜ்குமார் சாஹா ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் 6 மாநிலங்களைக் கண்காணிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது