சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் போட்டியிடுகிறார். நாளை நடைபெறும் இத்தேர்தலில் தர்மனுக்கே வெற்றி என்பது உறுதியாகி உள்ளது.
சிங்கப்பூர் அதிபராக ஹலிமா யாகூப் இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் செப்டம்பர் 13-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இனி அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அவர் அறிவித்திருக்கிறார். இதையடுத்து, புதிய அதிபரை தேர்வுச் செய்வதற்கான தேர்தல் நாளை (செப்டம்பர் 1) நடைபெறவிருக்கிறது.
இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 22-ம் தேதி நடைபெற்றது. இதில், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் (66), சீன வம்சாவளியைச் சேர்ந்த இங் கொக் சொங் (76), டான் கின் லியான் (75) ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். இவர்கள் 3 பேரும் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.
இதனால், அதிபர் தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டிருக்கிறது. எனினும், பழுத்த அரசியல்வாதியான தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளே அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
யார் இந்த தர்மன் சண்முகரத்தினம்?
இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர்தான் தர்மன் சண்முகரத்தினம். இலக்கை வடக்கு மாகாணம் யாழ்ப்பாணத்தின் ஊரெழு, உரும்பிராய் பகுதிகள்தான் இவரது பெற்றோரிடம் பிறப்பிடம். லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பட்டப்படிப்பும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்பையும் முடித்தவர். தொடர்ந்து, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொதுநிர்வாகத்தில் முதுநிலை பட்டம் பெற்றார். ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஜேன் யுமிக்கோ இட்டோகி என்பவரை திருமணம் செய்தார். இத்தம்பதிக்கு 3 மகள்கள், 1 மகன் உள்ளனர்.
2001-ம் ஆண்டு சிங்கப்பூரின் ஜூரோங் தொகுதியிலிருந்து எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து, இத்தொகுதியிலிருந்து 4 முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 22 ஆண்டுகால பழுத்த அரசியல்வாதி. சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர், துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்திருக்கிறார். 2019-ல் மூத்த அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த தர்மன், பொருளியல் கொள்கைகள் வகுப்பதில் பிரதமருக்கு ஆலோசனைகளையும் வழங்கி வந்தார்.
சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் அறங்காவலர் வாரியத் தலைவராகவும் பதவி வகிக்கிறார். தற்போது அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருப்பதால், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருப்பதோடு, மக்கள் செயல் கட்சியில் இருந்தும் விலகி இருக்கிறார்.
மேலும், தான் வகித்துவந்த அனைத்துப் பொறுப்புகளையும் துறந்திருக்கிறார். 2019-ல் மூத்த அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த தர்மன், பொருளியல் கொள்கைகள் வகுப்பதில் பிரதமருக்கு ஆலோசனைகளையும் வழங்கி வந்தார். சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் அறங்காவலர் வாரிய தலைவராகவும் பதவி வகிக்கிறார்.