திமுக அரசின் அராஜகம் மற்றும் பகுத்தறிவற்ற நடத்தைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் 4 பேர் கொண்ட குழுவினை விசாரணை நடத்த நியமித்த பாஜக தலைமைக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊழல் நிறைந்த திமுக அரசின் அராஜகம் மற்றும் பகுத்தறிவற்ற நடத்தைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் 4 பேர் கொண்ட குழுவினை விசாரணை நடத்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார். இதற்காக, தேசியத்தலைவருக்கும், தேசிய தலைமைக்கும் தமிழக பாஜக சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
2021 -ம் ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து திமுக அரசு பாசிசப் போக்கை மட்டுமே காட்டி வருகிறது.
முதலாவதாக, பாஜகவின் சமூக ஊடக நிர்வாகிகள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு, அற்பமான குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு, மிகைப்படுத்தப்பட்ட பிரிவுகள் சுமத்தப்படுகின்றன.
அடுத்து, பெரும்பாலான வழக்குகள் உள்ளூர் திமுகவின் ஊடக செயல்பாட்டாளர்களால் தாக்கல் செய்யப்படுகின்றன. ஊழல் திமுக அமைச்சர்களின் ஈகோவை திருப்திப்படுத்த காவல்துறைக்கு, பாஜகவினரைக் கைது செய்ய அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
மூன்றாவதாக, நள்ளிரவு மற்றும் அதிகாலையில் கைது செய்வது, 41ஏ சம்மன் அனுப்பாதது, ஜாமீன் வரும்போது புதிய அற்பமான குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது, வார இறுதி நாட்களில் அல்லது நீண்ட அரசு விடுமுறைக்கு முன்பு அவர்களைக் கைது செய்வது போன்றவை கொடூர திமுக அரசின் செயல்பாட்டிற்கு உதாரணமாகும்.
நான்காவதாக, சமூக மற்றும் முக்கிய ஊடகங்களில் பிரபலமானவர்களைக் குறிவைத்து கைது செய்வதில் திமுக அரசு தீவிரம் காட்டுகிறது. ஆனால், தமிழ்நாடு பாஜக தாக்கல் செய்யும் உண்மையான புகார்களைப் புறம் தள்ளிவிடுகிறது.
கடந்த 30 மாதங்களில் திமுகவின் இந்த அரசாங்கத்தின் அத்துமீறல்களையும், அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்ததையும் இந்தக் குழு வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் என்று நாங்கள் நம்புகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.