அமலாக்க இயக்குநரகத்தின் சம்மனைப் புறக்கணித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லி மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், அவர் ஆஜராகவில்லை.
இந்த நிலையில், அமலாக்க இயக்குநரகத்தின் சம்மனைப் புறக்கணித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியினர் ராஜ்காட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் டெல்லி பாஜக தலைவர் வீரேந்திரா சச்தேவா, டெல்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர், பாஜக தலைவர் ராம்வீர் சிங் பிதூரி மற்றும் பிற முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது, அவர்கள் பேசிய அவர்கள், மதுபான ஊழல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
இதே வழக்கு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ சம்மன் அனுப்பியது.
பிப்ரவரி 2023 -ல், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, கலால் கொள்கை தொடர்பான முறைகேடுகளுக்காக சிபிஐயால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.