பாகிஸ்தானில் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, கடந்த 2023-ல் தீவிரவாதம் தொடர்பான உயிரிழப்பு அதிகரித்துள்ளது.
இஸ்லாமாபாத்தில் அமைந்துள்ள ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான மையம் (CRSS), ஒவ்வொரு ஆண்டும் வருடாந்திர பாதுகாப்பு அறிக்கையை சேகரிக்கிறது. 2023-ஆம் ஆண்டில், பாகிஸ்தானில் 789 தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் காரணமாக, சுமார் ஆயிரத்து 524 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுமார் ஆயிரத்து 463 பேர் காயமடைந்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இறந்தவர்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களும், பாதுகாப்புப் படையினரும் அடங்குவர்.
மொத்த இறப்பு எண்ணிக்கை 2018-ஆம் ஆண்டை விட அதிகமாகவும், 2017-ஆம் ஆண்டிலிருந்து மிக அதிகமானதாகவும், ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
2021-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பாகிஸ்தானில் வன்முறை மற்றும் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்கள் வன்முறையின் முக்கிய மையங்களாக இருப்பதாக சிஆர்எஸ்எஸ் தெரிவித்துள்ளது.
கடந்த 2022-இல் ஒட்டுமொத்த இறப்புகளின் எண்ணிக்கை 980 இலிருந்து, 2023-இல் ஆயிரத்து 524 ஆக அதிகரித்துள்ளது. பலுசிஸ்தான் மாகாணத்தில் 57 சதவீதமும், கைபர் பக்துன்க்வாவில் 55 சதவீதமும் அதிகரித்துள்ளது.
2023-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வன்முறை தொடர்பான இறப்புகளில் 65 சதவீதம் தீவிரவாதத்தால் நிகழ்ந்ததாகவும், மீதமுள்ள 35 சதவீதம் தீவிரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்புப் படை நடவடிக்கைகளின் போது நிகழ்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் ஒரு வருடத்தில் குறைந்தது 586 தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், அதில் 17 சதவீதம் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளான தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான், பலூச் லிபரேஷன் ஆர்மி, டெய்ஷ் (இஸ்லாமிக்) போன்றவற்றால் நடந்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் தீவிரவாத குழுக்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 545 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.