தமிழ்நாடு அரசு நடத்திய நீதிபதி தேர்வில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் சுதா வெற்றி பெற்றுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த மேட்டுப்பாளையம் ஊராட்சியில் உள்ளது நாலா நல்லூர் என்ற கிராமம். இந்த ஊரில் வசித்து வரும் கணேசன் – சந்திரா தம்பதியருக்கு மூன்றாவது மகளாகப் பிறந்தவர் சுதா.
இவர், ஒன்றாம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை அங்குள்ள அரசு பள்ளியில் பயின்றார். பின்னர், திருவாரூர் திரு.வி.க. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். இதனைத்தொடர்ந்து, திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று தேர்ச்சி பெற்றார்.
திருத்துறைப்பூண்டியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பயிற்சி வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், தமிழக அரசு நடத்திய நீதிபதி தேர்வில், முதல் கட்டத் தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்றார். அதன் பிறகு, இரண்டாம் கட்ட தேர்விலும் வெற்றி பெற்றார். திருவாரூர் மாவட்டத்தில் நீதிபதி தேர்வில் ஏராளமானோர் கலந்து கொண்ட நிலையில், சுதா மட்டும் நீதிபதியாகத் தேர்ச்சி பெற்றுள்ளார்.
தனது வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள சுதா, “எங்கள் குடும்பம் சாதாரணக் குடும்பம். எங்க அப்பா கூலி வேலைக்குச் செல்பவர். நீதிபதியாக வேண்டும் என ஒரு வைராக்கியத்தோடு படித்தேன். நான் சிறுவயதாக இருக்கும்போது முதல் தற்போது வரை எனது தாய்மாமன் படிப்புக்காக உதவி செய்து வருகிறார்.
நான் இரண்டு விசயத்தை உடைத்துள்ளதாக கருதுகிறேன். முதலில் பெரிய பெரிய அகாடமியில் சேர்ந்து பல லட்சம் பணம் கட்டி படித்தால்தான் வெற்றிபெற முடியும் என்பதை உடைத்துள்ளேன். அடுத்து, இரண்டாவதாக, பெரிய பெரிய அதிகாரிகள் மகன், மகள்தான் வெற்றி பெற முடியும், சாதாரணமானவர்கள் வெற்றி பெற முடியாது என்பதை உடைத்துள்ளேன்.
அதாவது, என்னைப் போன்று சாதாரண மாணவர்களும் வெற்றி பெற முடியும் என்பதுதான் எனது சாதனை என்றார் மிக அடக்கமாக. குடிசை வீட்டில் இருந்து நீதிபதியாக ஜொலிக்கப்போகும் சுதாவுக்கு, திருவாரூர் பெண்கள், சமூக சேவகர்கள், சட்ட அறிஞர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துமழை பொழிந்து வருகிறார்கள்.