செங்கடலில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை உட்பட பிளவுபட்ட புவிசார் அரசியல் சூழலுக்கு மத்தியில், இந்தியாவின் சார்பில், சுமார் 50 நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கும், கடற்படை கூட்டுப் பயிற்சி விசாகப்பட்டினத்தில் தொடங்கியது.
இந்திய கடற்படையின் சார்பில், ‘மிலன் 24’ எனப்படும் 12-வது கடற்படை கூட்டுப்பயிற்சி, ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி (இன்று) தொடங்கியது. இந்த கூட்டுப் பயிற்சி 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த கூட்டுப்பயிற்சியில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பங்களாதேஷ், தென்கொரியா, வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா உட்பட 50 நாடுகளின் கடற்படைகள் கலந்து கொள்கின்றன. நட்பு நாடுகளிலிருந்து 15 போர்க்கப்பல்கள் மற்றும் ஒரு கடல் ரோந்து விமானம் வரவழைக்கப்பட்டதுடன் இந்த பயிற்சி தொடங்கியது.
கடல்சார் படைகளின் செயல்பாட்டு திறன்களை வளர்த்துக்கொள்வது, சிறந்த நடைமுறைகளை பகிர்ந்துகொள்வது மற்றும் கடற்படைகளுக்கு இடையிலான தொழில்முறை ஒத்துழைப்பை மேம்படுத்துவது ஆகியவை இந்தக் கூட்டுப்பயிற்சியின் நோக்கமாக கூறப்பட்டுள்ளது.
இந்திய கடற்படையில் இருந்து, விமானம் தாங்கி கப்பல்களான விக்ராந்த் மற்றும் விக்ரமாதித்யா உட்பட கிட்டத்தட்ட 20 கப்பல்களும், MiG 29K, தேஜாஸ் மற்றும் நீண்ட தூர கடல் கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் விமானங்கள் உட்பட கிட்டத்தட்ட 50 விமானங்களும் பயிற்சியில் பங்கேற்கின்றன.
கடற்படை பயிற்சியில் பெரிய படை சூழ்ச்சிகள், மேம்பட்ட வான் பாதுகாப்பு நடவடிக்கைகள், நீர்மூழ்கி எதிர்ப்பு போர் மற்றும் மேற்பரப்பு எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் மிலன் கூட்டுப்பயிற்சி முதன்முதலில் கடந்த 1995-ஆம் ஆண்டு அந்தமான் மற்றும் நிக்கோபார் கடற்படை கட்டுப்பாட்டு மையத்தால் ஏற்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.