காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ நியாய யாத்திரையால் மக்களவை தேர்தலில் எந்த பலனும் ஏற்படாது என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
அருணாச்சல பிரதேச மாநிலம் இட்டா நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராகுல் காந்தி யாத்திரை சென்ற போது அதனை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும், அவர் யாத்திரை செல்லாமல் இருந்திருந்தால் காங்கிரஸ் கட்சிக்கு சில இடங்களில் வெற்றி கிடைத்திருக்கும் என்று தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் இதயம், ஆன்மா மற்றும் உடல் முழுவதும் பிரதமர் மற்றும் பாஜக மீதான வெறுப்பால் நிரம்பியுள்ளதாகவும், இது அவரது உடல்நிலைக்கு நல்லதல்ல என்றும் கிரண் ரிஜிஜு கூறினார்.
தனது திறமை, மக்களின் அன்பு மற்றும் ஆசியால் பிரதமராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜக 370க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றும். தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
அருணாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 60 இடங்களில் 55 இடங்களை பாஜக கைப்பற்றும் என்றும் கிரண் ரிஜிஜு கூறினார்.