ஈரோடு, சேலம், திருச்சி மாவட்டங்களில் உள்ள இந்தியன் பப்ளிக் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக பிரமுகர் ஆற்றல் அசோக்குமாருக்கு சொந்தமான இந்தியன் பப்ளிக் பள்ளிகள் தமிழகம், கர்நாடகா, கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வருகின்றன. தென் மாநிலங்களில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தியன் பப்ளிக் பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில், ஈரோட்டில் உள்ள பள்ளிக்கு தொலைபேசி வாயிலாக மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
இது தொடர்பான புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்றபோலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனையில் ஈடுபட்டனர். வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு மாணவர்கள் பள்ளி வாகனங்கள் மூலம் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதேபோல் திருச்சி – திண்டுக்கல் சாலையில் செயல்பட்டு வரும் இந்தியன் பப்ளிக் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலமாக மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனையடுத்து பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளியில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம், ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள இந்தியன் பப்ளிக் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இது குறித்து பள்ளி நிர்வாகம் அளித்த தகவலின்பேரில், பள்ளியில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.