ஓணம் பண்டிகையை கொண்டாடும் மலையாள மக்களுக்கு குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
திருவோணம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சமூக நல்லிணக்கத்தை ஊக்குவித்து, நாட்டின் அமைதி மற்றும் ஒற்றுமை நிலைத்திருக்க நாம் அனைவரும் பணியாற்றுவோம் என தெரிவித்துள்ளார்.
மலையாள மக்களுக்கு எங்கும் அமைதி, செழிப்பு, நல்வாழ்வு நிலவட்டும் என்று பிரதமர் மோடி தனது இனிய ஓணம் நல்வாழ்த்துகளை கூறியுள்ளார்.
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோருக்கு புதிய வீடுகளை கட்டித்தர முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு பொதுமக்கள் பங்களித்து ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தை அர்த்தமுள்ளதாக மாற்ற வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமத்துவம், சகோதரத்துவத்தின் வெளிப்பாடாக ஓணத் திருநாளைக் கொண்டாடும் தனது அன்பிற்கினிய மலையாள உடன்பிறப்புகள் அனைவருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துகள் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஓணம் பண்டிகையை ஒட்டி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், மலையாளி சமூகத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகளுக்கு எங்கள் இதயப்பூர்வமான ஓணம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கேரளாவின் உன்னதமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் இந்த கொண்டாட்டம், அனைவருக்கும் மகிழ்ச்சியையும், செழிப்பையும், அமைதியையும் கொண்டு வரட்டும் என தெரிவித்துள்ளார்.