குன்றக்குடி சண்முகநாதன் கோயில் சுப்புலட்சுமி யானையின் உயிரிழப்பு பக்தர்களுக்கு ஈடுகட்ட இயலாத பேரிழப்பாக அமைந்துள்ளது. அளவற்ற அன்பைப் பெற்ற சுப்புலட்சுமிக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடி சண்முகநாதன் திருக்கோயிலுக்கு 1971ம் ஆண்டு காடப்ப செட்டியார் என்பவரால் சுப்புலட்சுமி என பெயர்கொண்ட இரண்டு வயது குட்டி யானை தானமாக வழங்கப்பட்டது.
கோயில் விழாக்கள் மற்றும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கும் சுப்புலட்சுமி பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது. கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் முருகனை வணங்கிவிட்டு சுப்புலட்சுமியிடம் ஆசிர்வாதம் பெறுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது.
பக்தர்களிடமும், பொதுமக்களிடமும் அன்பாக நடந்து கொள்ளும் சுப்புலட்சுமி யானை தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த கொட்டகையின் மேற்புறத்தில் தென்னங்கீற்றுகள் அமைக்கப்பட்டிருந்தன.
இரவு நேரத்தில் கொட்டகையில் வைக்கப்பட்டிருந்த விளக்கில் இருந்து பரவிய தீ கொட்டகை முழுவதும் பரவியதால் சுப்புலட்சுமி யானை உடல்கருகி உயிரிழந்தது. சுப்புலட்சுமியின் உயிரிழப்பு அப்பகுதி பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஈடுகட்ட முடியாத பேரிழப்பாக அமைந்திருக்கிறது.
அனைவரின் அன்பைப் பெற்ற சுப்புலட்சுமியின் உடலுக்கு பக்தர்களும், பொதுமக்களுக்கும் திரண்டு வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். குன்றக்குடி பொன்னம்பலம் அடிகள் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் சிறப்பு பூஜைகள் நடத்திய பின்பு, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட சுப்புலட்சுமி யானை ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஆலய நிர்வாகத்தின் அலட்சியப் போக்கே சுப்புலட்சுமி உயிரிழப்புக்கு காரணம் என அப்பகுதி பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
முருகன் சன்னதிக்கு வரும்போதெல்லாம் கண்ணெதிரே நின்ற சுப்புலட்சுமி யானை இனி இல்லை என்பதை அப்பகுதி மக்களாலும், பக்தர்களாலும் ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு துயரத்தை ஏற்படுத்தியுள்ளது