சர்வதேச விண்வெளி மையம் சென்றடைந்த நாசா விண்வெளி வீரர்களை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் வரவேற்றனர்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சார்பில் இந்திய வம்சாவளியை சேந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஜூன் 5ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர். போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு சென்ற இருவரும் ஆய்வு நடத்திவிட்டு ஜூன் 14ஆம் தேதி பூமிக்கு திரும்ப திட்டமிட்டிருந்த நிலையில், ஸ்டார் லைனரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து இருவரையும் பூமிக்கு அழைத்துவர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், எந்த பலனும் எட்டாததால் அடுத்த ஆண்டு பிப்ரவரியில்தான் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா அறிவித்தது.
இதனிடையே, விண்வெளியில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரையும் மீட்க எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் விண்ணுக்கு புறப்பட்டது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கன்வெர்லில் இருந்து 2 விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் விண்ணுக்கு புறப்பட்டு சென்றது. இந்நிலையில், சர்வதேச விண்வெளி மையத்தை வந்தடைந்த நாசா விண்வெளி வீரர்களை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் வரவேற்றனர்.