வாழ்க்கையின் தத்துவத்தைப் படிப்படியாக விளக்கும் கொலு பொம்மைகளை வைத்து வழிபடும் நவராத்திரி விழா அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கி 9 நாட்கள் நடைபெறவுள்ள நிலையில் கொலு பொம்மைகளின் விற்பனை களைகட்டியுள்ளது. அது குறித்து ஒரு செய்தி தொகுப்பு………
தமிழ் வருடத்தின் 12 மாதமும் பிரசித்தி பெற்ற மகத்துவம் நிறைந்த மகத்தான மாதங்கள்தான். அதில் புரட்டாசி மாதத்தில் வீடுகளில் வைக்கப்படும் கொலு வழிபாடு கூடுதல் பிரசித்தி பெற்றதாகும்.
நவராத்திரியை கொலு பண்டிகை என்று அழைப்பது இப்பண்டிகைக்கே உள்ள தனிச் சிறப்பு. உலக உயிர்கள் அனைத்தும் தங்களைத் தெய்வ நிலைக்கு உயர்த்திக்கொள்ளப் பாடுபட வேண்டும் என்பதே கொலுவின் தத்துவமாகும்.
வீட்டில் ஒரு அறையைத் தேர்ந்தெடுத்து அந்த அறையைச் தூய்மைப்படுத்தி மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு அல்லது ஒன்பது படிகளை வசதிக்கும், இடத்திற்கும் ஏற்றபடி உருவாக்கி கொலுவானது அமைக்கப்படுகிறது.
முதல் படியின் நடுவில் கலசத்தை வைத்து பச்சரிசியை நிரப்பி, ஐந்து மாவிலைகளை வட்டமாக அடுக்கி, மஞ்சள், குங்குமம் பூசிய தேங்காயை அதில் பொருத்துகின்றனர். அப்போது முதல், நவராத்திரி வழிபாடும், கொலு வழிபாடும் தொடங்குகின்றன. கொலு வைக்கப்பட்டுள்ள அறையின் ஒரு பகுதியில் நவதானியங்களை விதைக்கின்றனர். அவை செழித்து வளர்ந்தால், குடும்பமும் செழிப்புடன் விளங்கும் என்பதே நம்பிக்கையாக உள்ளது.
வாழ்க்கையின் தத்துவத்தைப் படிப்படியாக விளக்கும் நவராத்திரியானது நாளை தொடங்கி 9 நாட்கள் நடைபெறவுள்ளன.
வீடுகள் தோறும் இந்த நவராத்திரி கொண்டாட்டத்திற்கான கொலு பொம்மை விற்பனை நாடு முழுவதும் களை கட்டியுள்ளது. அந்த வகையில், சென்னையில் குறலகம், அண்ணாசாலை பூம்புகார் கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் , காதி கிராப்ட் உள்ளிட்ட விற்பனை மையங்களில் கொலு பொம்மைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை களைகட்டியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரியின் போது புது, புது பொம்மைகள் விற்பனைக்கு வருவதாகவும், அதை வாங்குவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், தெரிவிக்கும் விற்பனையாளர்கள், சுமாா் 7 அடி வரையிலான உயரம் கொண்ட பொம்மைகளையும் வாங்கிச் செல்வதாக தெரிவித்துள்ளனர்.
கொலு வைப்பதற்காக தங்களின் வசதிக்கேற்ப பொம்மைகளை ஆர்வமுடன் வாங்கிச் செல்லும் பெண்கள், இதனால் தங்களின் வாழ்வில் வளம் பெறுவதாக தெரிவிக்கின்றனர்.
வாழ்க்கையின் தத்துவத்தைப் படிப்படியாக விளக்கும் கொலு பொம்மைகளை வைத்து வழிபட்டு நவராத்திரி விழாவை சிறப்பாக கொண்டாடுவோம்…