இஸ்ரேல், ஈரான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி தனது அமைச்சரவை சகாக்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.
ஈரான், இஸ்ரேல் மீது ஏவகணை தாக்குதல் நடத்திய நிலையில், மேற்காசிய பகுதிகளில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.இந்நிலையில் தலைநகர் டெல்லியில், பிரதமர் மோடி மூத்த அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
வளைகுடா நாடுகளுடன் பெட்ரோலிய வர்த்தகத்தை இந்தியா மேற்கொண்டு வரும் நிலையில், போர் பதற்றத்தால் வர்த்தகத்தில் தடைகள் ஏதும் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் போர் மூளும் அபாயத்தை தடுக்க இந்தியா என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் ஆலோசித்தாக தெரிவிக்கப்படுகிறது.மேற்காசிய நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்தும் பிரதமர் விவரங்கள் கேட்டறிந்ததாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.