நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தாம் போட்டியிட்ட இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறார். ஜம்மு காஷ்மீரின் முதல்வராகும் உமர் அப்துல்லா யார் என்பது பற்றிய ஒரு சிறப்புத் தொகுப்பை இப்போது பார்க்கலாம்….
1970 ஆண்டில் இங்கிலாந்தில் பிறந்த உமர் அப்துல்லாவின் குடும்பமே அரசியல் குடும்பம் தான், இவரது தாத்தா ஷேக் அப்துல்லா தான், ஜம்மு காஷ்மீரின் முதலாவது முதலமைச்சர். கடந்த 1932 ஆம் ஆண்டு ஷேக் அப்துல்லா தொடங்கிய தேசிய மாநாட்டுக் கட்சி தான், ஜம்மு காஷ்மீரின் முதல் அரசியல் கட்சியாகும். அவருக்குப்
பிறகு, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவராக அவரது மகன் ஃபரூக் அப்துல்லா பொறுப்பேற்றுக் கொண்டார். உமரின் தந்தை ஃபரூக் அப்துல்லாவும் ஜம்மு காஷ்மீரின் முதல்வராக மூன்று முறை பதவி வகித்திருக்கிறார். தாத்தா முதல் பேரன் வரை ஒரே குடும்பத்தில் மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்களும் முதலமைச்சர்களாக இருந்துள்ளனர்.
கடந்த 1998 ஆம் ஆண்டில், தனது 28 வது வயதில், தேர்தலில் போட்டியிட்டு, நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றிபெற்று தனது அரசியல் பயணத்தை உமர் அப்துல்லா தொடங்கினார். முதல் முறையாக நாடாளுமன்றத்துக்குள் சென்ற உமர் அப்துல்லா, அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை இணை அமைச்சராக பொறுப்பில் இருந்தார்.
இரண்டு ஆண்டுகள் கழித்து, தனது தாத்தா தொடங்கிய தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரானார். பிறகு மாநில அரசியலில் கவனம் செலுத்துவதற்காக, மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகிய உமர் அப்துல்லா, மாநிலத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்தார்.
அடுத்து நடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு, உமர் அப்துல்லா வெற்றிப் பெற்றார். தொடர்ந்து வந்த ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக மாநிலத்தின் மிக இளம் முதல்வரானார்.
ஜம்மு காஷ்மீர் வரலாற்றில், தந்தை ஃபரூக் அப்துல்லாவுக்குப் பிறகு முழுமையாக 5 ஆண்டு காலமும் மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்த பெருமை உமர் அப்துல்லாவுக்கு உண்டு.
கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்ட உமர் அப்துல்லா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப் பிரிவு நீக்கப்பட்டதற்கு உமர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து, ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தது தேசிய மாநாட்டுக் கட்சி. கந்தர்பால் மற்றும் புட்கம் ஆகிய இரண்டு தொகுதிகளில் உமர் அப்துல்லா போட்டியிட்டார். கந்தர்பால் தொகுதியில் கிட்டத்தட்ட 10000க்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்திலும் , புட்கம் தொகுதியில், கிட்டத்தட்ட 20,000 வாக்கு வித்தியாசத்திலும் உமர் அப்துல்லா வெற்றி பெற்றுள்ளார்.
தேசிய மாநாட்டு கட்சி தலைமையிலான இண்டி கூட்டணி 50 இடங்களைக் கைப்பற்றியதை தொடர்ந்து, உமர் அப்துல்லா முதல்வர் ஆவார் என்று கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா அறிவித்தார்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வராகும் மீண்டும் உமர் அப்துல்லாவின் ஆட்சியில், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் , ஜம்மு- காஷ்மீரின் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க தேசிய மாநாட்டு கட்சி போராடும் என்றும் தெரிவித்துள்ளார்.