புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே களிமண் சிலைகளை வடிவமைப்பதில் வல்லமை பெற்றவராக விளங்கும் இளம்பெண் பூமதி தயாரிக்கும் சிலைகள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. பூமதியின் கை வண்ணத்தில் உருவாகும் சிலைகள் குறித்தும், அதன் தயாரிப்பு முறை குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுக்கா நாகுடி அருகில் உள்ள கீழ்குடி கிராமத்தைச் சேர்ந்த பூமதியின் கை வண்ணத்திற்கு தனி மதிப்புண்டு என சொல்லும் அளவிற்கு அவரால் தயாரிக்கப்படும் சிலைகள் மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றன.
சுவாமியின் படத்தை ஒருமுறை பார்த்து தன் மனதில் பதிய வைத்துக் கொண்டு தத்ரூபமாக அச்சிலையை வடிவமைப்பதில் வல்லவராக பூமதி திகழ்ந்து வருகிறார். தனது பள்ளிப்படிப்பை 2016ம் ஆண்டு நிறைவு செய்த பூமதியின் மேற்படிப்புக்கு பொருளாதாரம் பெரிய தடையாக இருந்ததினால் தந்தை செய்யும் தொழிலிலேயே தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டார்.
பூமதியின் கை வண்ணத்தில் உருவாகும் சாமி சிலைகளை பார்க்கும் போது சாமியையே நேரில் பார்ப்பது போன்ற எண்ணம் தோன்றும் அளவிற்கு தத்ரூவமாக இருப்பதால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் சிலைகள் தயாரிப்பதற்கான ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கின்றன. தாய், தந்தையரின் பணிகளை பார்த்து தானாக விரும்பி இத்தொழிலை கற்றுக் கொண்டதாக கூறுகிறார் பூமதி
பூமதியால் ஒரு அடி முதல் 9 அடி உயரம் வரை தயாரிக்கப்படும் சுவாமி சிலைகள், பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் பொதுமக்கள் தரிசனம் பெறுவதற்காக வைக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட சுவாமி சிலைகளை தயாரித்திருப்பதோடு, அப்துல்கலாம், விஜயகாந்த் போன்ற தலைவர்களின் உருவங்களையும், பறவைகள், விலங்குகளையும் தத்ரூபமாக வடிவமைத்திருக்கிறார் பூமதி
காலப்போக்கில் நலிவடைந்து வரும் இந்த தொழிலை ஊக்குவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள பூமதியின் தந்தை மெய்யநாதன், இத்தொழிலுக்கான அங்கீகாரத்தையும் வழங்க அரசு முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
களிமண் சிலைகளை வடிவமைப்பதில் வல்லமை பெற்று விளங்கும் பூமதியை பாராட்டி, அறியப்படாத அதிசய மனிதர்கள் எனும் தலைப்பில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டுக் கடிதமும் அனுப்பியிருந்தார். இதே போன்று பல்வேறு அரசியல் தலைவர்களின் பாராட்டை பூமதி பெற்றுள்ளார்.
தான் கற்றுக் கொண்ட தொழில் தன்னோடு முடிந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் பூமதி, அடுத்த தலைமுறைக்கும் கற்றுக் கொடுக்க தயாராக இருப்பதாகவும் அறிவித்திருப்பது கலை மீது அவர் வைத்திருக்கும் பற்றை வெளிப்படுத்துகிறது.