இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரிய மனு மீது ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும் வரை, சின்னத்தை யாருக்கும் ஒதுக்ககூடாது என தேர்தல் ஆணையத்திற்கு தாம் விண்ணப்பம் அளித்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
தமது மனு மீது தேர்தல் ஆணையம் எந்த பதிலும் அளிக்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், மனு மீது உரிய விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பிப்ரவரி மாதம் அளித்த விண்ணப்பம் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த தலைமை தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரிய மனு மீது ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என பதிலளித்தார்.
தலைமை தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞரின் பதிலை பதிவு செய்த நீதிபதிகள், விசாரணையை டிசம்பர் 2-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.