மதமோதலை தூண்டும் விதமாக ஐயப்ப பக்தர்களை இழிவுபடுத்தி கிறிஸ்தவ அடையாளச் சின்னத்துடன் பாடல் பாடிய கானா பாடகி இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில இந்திய நாடார் கூட்டமைப்பினர், டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஏற்பாடு செய்திருந்த மார்கழி மக்களிசை இசை நிகழ்ச்சியில் கானா பாடகி இசைவாணி ஐயப்ப சுவாமி குறித்து சர்ச்சை ஏற்படுத்தும் விதமாக பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
இதற்கு இந்து அமைப்பினர் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அகில இந்திய நாடார் கூட்டமைப்பினர் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அதில், மதமோதலை தூண்டும் விதமாக ஐயப்ப பக்தர்களை இழிவு படுத்தி பாடல் பாடிய இசைவாணி , நீலம் இயக்கத்தின் இசைக் குழுவினர் மற்றும் நடன குழுவினரை கைது செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் நீலம் அமைப்பிற்கு தடை விதித்து இயக்குநர் பா.ரஞ்சித்தை கைது செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.