தேசிய சிறுபான்மையின ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் இல்லை என மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேசிய சிறுபான்மையின ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்கப்படுமா என மக்களவையில் விழுப்புரம் தொகுதி விசிக எம்.பி. ரவிக்குமார் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதிலளித்தார். அதன்படி, தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழுவின் 53-வது அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டு இருப்பதாக கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.
ஆனால், அவ்வாறு அரசமைப்பு அந்தஸ்து அளிக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை எனவும், தற்போது அந்த ஆணையத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களே போதுமானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.