வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கும், இஸ்கான் தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டதற்கும், இங்கிலாந்து எம்.பி. பாப் ப்ளாக்மேன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பேசிய கன்சர்வேடிவ் கட்சி எம்பி பாப் ப்ளாக்மேன், வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும், அவர்களின் வீடுகள் உடைமைகள் மற்றும் கோயில்கள் சூறையாடப்படுவதாகவும் கண்டனம் தெரிவித்தார்.
வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பை தடை செய்ய நீதிமன்றத்தில் முயற்சி நடைபெற்றதை சுட்டிக்காட்டிய அவர், இது இந்துக்கள் மீதான நேரடி தாக்குதல் என்றும் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச அளவில் மத சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறிய அவர், வங்கதேசத்தில் நடைபெறுவது சர்வதேச கவனத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும் என தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருவதையும் பாப் ப்ளாக்மேன் குறிப்பிட்டு பேசினார்.
முன்னதாக, வங்கதேசம் உருவானபோது, இஸ்கான் நிறுவனர் பிரபுபாதர் 20 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் திரட்டியதையும், பஞ்சம் மற்றும் வெள்ளத்தால் வங்கதேசம் பாதிக்கப்படும்போதெல்லாம், இஸ்கான் அமைப்பு உணவு வழங்கியும், வீடுகள் கட்டிக்கொடுத்தும் உதவியதை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்ந்து வருகின்றனர்.