சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவிற்கு, வரும் டிசம்பர் 2ஆம் தேதிக்குள் அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்தது. தமக்கு ஜாமின் கோரி சிபிஐ நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட தம்மிடம் அமலாக்கத்துறை விசாரணை முடிவுற்று குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கில் தமக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்றும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஜாபர் சாதிக் ஜாமின் மனு நீதிபதி எழில் வேலவன் முன் விசாரணைக்கு வந்தபோது அமலாக்கத்துறை தரப்பில், பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டது.
இதனையடுத்து அமலாக்கத்துறை பதில் மனுத்தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை டிசம்பர் 2ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.