திருப்பதியில் இன்று நடைபெற்ற சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று திருப்பதி திருமலையில் தங்க தேரோட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. தொடர்ந்து துவாதசி தினமான இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது.
ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி, சக்கரத்தாழ்வார் ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு வராக முகமண்டபத்தில் பால், பன்னீர், தேன் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்று, பின் கோயில் திருக்குளத்தில் அர்ச்சகர்கள் மூலம் தீர்த்தவாரி நடத்தப்பட்டது. இதனை திரளான பக்தர்கள் கண்டு, கோவிந்தா கோஷங்கள் முழங்க சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.