திருப்பூரில் திமுக வேட்பாளரும் மேயருமான தினேஷ்குமாருக்கு எதிராக பொதுமக்கள் 400 பேர் சுயேட்சையாக போட்டியிடவுள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள், முதலிபாளையம் பகுதியில் உள்ள பயன்பாட்டில் இல்லாத பாறைக்குழிகளில் கொட்டப்பட்டு வருகின்றன.
இதனால் அப்பகுதியில் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாகவும், நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இருப்பினும், இதுவரை அங்கு கொட்டப்பட்ட குப்பைகளை அகற்றவோ அல்லது மாற்று ஏற்பாடு செய்யவோ மாநகராட்சி நிர்வாகம் முன்வரவில்லை.
இதனிடையே, திருப்பூர் தெற்கு தொகுதி திமுக வேட்பாளராக மேயர் தினேஷ்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவரை தோற்கடிக்கும் நோக்கில் முதலிபாளையம் பகுதியைச் சேர்ந்த 400 பேர் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்யப் போவதாக அறிவித்தனர்.
இதனையடுத்து, 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு வாங்குவதற்காக மாநகராட்சி அலுவலகத்தில் திரண்டதால் பதற்றம் நிலவியது.
















