விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது.
கட்டனார்பட்டியில் முத்துமாணிக்கம் என்பவருக்கு சொந்தமாக வனஜா பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. ஆலையில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். இந்நிலையில், வீரியம் மிகுந்த வெடி மருத்துகளை கையாளும் போது வெடி விபத்து ஏற்பட்டது.
இதில், பட்டாசு ஆலையில் இருந்த 4 அறைகள் முற்றிலும் சேதமடைந்தன. இந்த விபத்து காரணமாக சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிர்வு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. தகவலறிந்து சென்ற சிவகாசி, சாத்தூர், விருதுநகரைச் சேர்ந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது. மேலும், 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, மதுரை சரக டிஐஜி அபினவ் குமார், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பட்டாசு ஆலை விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து வெடிவிபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், ஆலை உரிமையாளரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்துள்ளனர்.
















