ஆடி அமாவாசையை முன்னிட்டு காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் குடில் அமைத்து தங்குவதற்காக உடைமைகளுடன் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா களைகட்டியுள்ளது. 6 நாட்களுக்கு பக்தர்கள் கோயில் பகுதியில் தங்கி வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பம் குடும்பமாக பக்தர்கள் கோயிலுக்கு வந்து வண்ணம் உள்ளனர்.
வாகனங்களில் கொண்டு வந்த உணவுப் பொருட்கள், உடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுடன் வந்த பக்தர்கள் குடில்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, குறுகிய மலைச்சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஒரு நேரத்தில் 30 வாகனங்கள் வீதம் வனத்துறையினர் அனுமதித்து வருகின்றனர். மேலும், பாபநாசம் வனச்சோதனைச்சாவடி முதல் காரையாறு வரை காவல்துறை மற்றும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
















