இந்தியாவின் கிழக்கு எல்லையில் வங்கதேசம் மற்றொரு பாகிஸ்தானாக உருவாகி வருகிறது,” என வங்க தேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகன் தெரிவித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த 2024ம் ஆண்டு நடந்த நாடு தழுவிய மாணவர் போராட்டங்களின் விளைவாக வங்கதேசத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேல் அதிகாரத்தில் இருந்த முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அரசு கவிழ்க்கப் பட்டது.
இதையடுத்து இந்தியாவில் தஞ்சமடைந்த ஷேக் ஹசீனாவைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, அவர் மீதான வழக்குகளை விரைவாக நடத்தியது. நீதிமன்றமும் ஷேக் ஹசீனாவுக்கு மரணதண்டனை வழங்கியது.
இதற்கிடையே அரசியல் சூழல் காரணமாக வெளிநாட்டில் வசித்துவரும் ஷேக் ஹசீனாவின் மகனான சஜீப் வாசேத் ஜாய் தொடர்ச்சியாக தனது அரசியல் கருத்துக்களைக் காணொளி வாயிலாக தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், தெற்காசிய வெளிநாட்டுச் செய்தியாளர்கள் சங்கத்தால் (FCC) ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் ஷேக் ஹசீனா காணொளி வாயிலாக உரையாற்றியுள்ளார்.
கடந்த 2024ம் ஆண்டு பேச்சுவார்த்தை மூலம் நெருக்கடியைத் தீர்க்கத் தனது அரசு பலமுறை முயற்சித்ததாக தெரிவித்த ஷேக் ஹசீனா, நாட்டின் ஸ்திரத்தன்மையைக் குலைக்கத் திட்டமிட்ட அரசியல் அமைப்புக்கள் இடஒதுக்கீடு தொடர்பான மாணவர் போராட்டத்தை அரசுக்கு எதிரான போராட்டமாக மாற்றி ஆட்சியைக் கவிழ்த்தன என்று கூறியுள்ளார்.
மேலும் யூனுஸ் நிர்வாகம் பதவியேற்றதும் செய்த முதல் காரியங்களில் ஒன்று, ‘இழப்பீட்டு மசோதா’ (Indemnity Bill) என்ற அவசரச் சட்டத்தை நிறைவேற்றியதுதான் என்றும், அது போராட்டக்காரர்கள் அனைவருக்கும் முழுமையான சட்டப் பாதுகாப்பை அளித்தது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சஜீப் வாசேத் ஜாய், இந்தியாவுக்கு இன்னொரு பாகிஸ்தானாக வங்கதேசம் உருவெடுத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் வங்கதேசத்தில் நடந்த மாணவர் போராட்டங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.
1400 பேர் உயிரிழந்துள்ளதாக ஐநா சபை தெரிவித்துள்ள நிலையில் அப்போதைய வங்கதேச இடைக்கால அரசு அந்த எண்ணிக்கை 800க்கும் சற்று அதிகம் என்று கூறியிருந்ததாகவும், கூடுதலாக 600 பேர்களின் பெயர்களை ஐநா எங்கிருந்து பெற்றது? அவர்கள் யார் ? என்று சஜீப் வாசேத் ஜாய் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும் அவாமி லீக் கட்சியும் அக்கட்சியின் வழக்கறிஞர்களும் தொடர்ந்து பலமுறை ஐநா சபைக்குக் கடிதம் எழுதியும் இதுவரை பதில் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் கிழக்கு எல்லையில் வங்கதேசம் மற்றொரு பாகிஸ்தானாக உருவாகி வருவதாக கூறியுள்ள சஜீப் வாசேத் ஜாய், வங்கதேசத்தில் பாகிஸ்தானின் ISI வெளிப்படையாக செயல்படுவதாக அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே கடந்த நவம்பரில் சஜீப் வாசேத் ஜாய் பேசிய ஒரு காணொளியில் லஷ்கர்-இ-தொய்பா போன்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள், வங்கதேசத்தில் சுதந்திரமாகச் செயல்படுவதாகவும், அதன் உள்ளூர் கிளைக்கும் டெல்லியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும் வங்கதேசத்தில் நடந்த மாணவர் போராட்டங்களிலும் ISI ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் ஊடுருவியதாகவும் கூறி, அதற்கான வீடியோ ஆதாரத்தையும் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும் 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் உட்பட அவாமி லீக் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் பல்லாயிரக்கணக்கில் விசாரணை, முறையான சட்ட நடைமுறை ஏதுமின்றி ஜாமீன் வழங்கப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பலர் சிறையில் உயிரிழந்துள்ளதாகவும் ‘ஜாய்’ குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கிடையே ஊடகங்களுடன் காணொளி வாயிலாக உரையாடும் ஷேக் ஹசீனா, திட்டத்துக்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், அந்த நிகழ்வில் முன்வைக்கப்படக்கூடிய கருத்துகள் எதையும் மத்திய அரசு ஆதரிக்கவும் இல்லை என்று விளக்கமளித்துள்ளார்.
















