இந்திய ரயில்வேயின் முதல் ‘வந்தே பாரத் சரக்கு ரயில்’ வெற்றிகரமாகச் சோதனை ஓட்டத்தை நிறைவு செய்து சாதனை படைத்துள்ளது.
பயணிகள் போக்குவரத்தில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய வந்தே பாரத் ரயில்களை தொடர்ந்து, இந்திய ரயில்வேயின் முதல் ‘வந்தே பாரத் சரக்கு ரயில்’ ராஜஸ்தானில் உள்ள கோட்டா – ரோஹல் குர்த் ரயில் பாதையில் சோதனை செய்யப்பட்டது. இந்த சரக்கு ரயில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் தனது சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்து புதிய சாதனை படைத்துள்ளது.
சென்னை பெரம்பூரில் உள்ள இன்டிக்ரல் கோச் ஃபேக்டரி தயாரித்துள்ள இந்த வந்தே பாரத் சரக்கு ரயிலில் 16 பெட்டிகள் இடம்பெற்றுள்ளன. பார்சல்கள் மற்றும் பல்வேறு சரக்குகளை வேகமாக கொண்டு செல்வதற்காக இந்த ரயில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய சரக்கு ரயில்களைவிட வேகமாகவும், நேரம் முக்கியமான சரக்குகள் மற்றும் பார்சல்களை திறம்பட கொண்டு செல்லவும் இந்த புதிய ரயில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பயணிகள் போக்குவரத்துக்காக உருவாக்கப்பட்ட வந்தே பாரத் தொழில்நுட்பம், தற்போது இந்தியாவின் சரக்கு மற்றும் தளவாடத் துறையிலும் கால்பதிக்கிறது.
















