விமானத்தில் துணை விமானியால் கத்திக் குத்துக்கு ஆளான நிலையிலும் துணிச்சலுடன் செயல்பட்டு 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரால் இந்தியா பெருமை கொள்வதாக பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
செப்டம்பர் 30ம் தேதி துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கி 174 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் ஃப்ளை துபாய் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் பறந்து கொண்டிருந்தது.
இதில் ஓமனைச் சேர்ந்த துணை விமானி திடீரென முதன்மை விமானியான இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த Captain Smit Machchhar யைக் கத்தியால் குத்தி, விமானத்தைத் தன் கட்டுப்பாட்டில் எடுக்க முயன்றுள்ளார்.
இந்த அசம்பாவிதத்தால் ஜோர்டான் வான்வெளியில் 34,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து சுழலத் தொடங்கி சுமார் 17,000 அடி வரை செங்குத்தாக கீழே சரிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே பொதுவான அவசரநிலை சமிக்ஞை மற்றும் விமானம் கடத்தப்பட்டதைக் குறிக்கும் குறியீட்டுச் செய்தியும் அனுப்பப் பட்டது.
இதற்கிடையே படுகாயமடைந்த கேப்டன் ஸ்மித் மச்சார், கடுமையாக போராடி விமான ஓட்டுநர் அறையின் கதவைத் திறந்துள்ளார். மேலும் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த இஸ்ரேல் பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள், தாக்குதல் நடத்திய துணை விமானியை மடக்கிப் பிடித்தனர்.
தொடர்ந்து விமானத்தில் பயணித்த பிற மாற்று விமானிகளின் உதவியுடன் வட மேற்கு சவூதி அரேபியாவின் தாபுக் விமான நிலையத்திற்கு விமானம் திசைத் திருப்பப்பட்டு அவசர அவசரமாகப் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
தாக்குதல் நடத்திய துணை விமானியை சவூதி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். காயமடைந்த இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 174 பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மாற்று விமானம் மூலம் இஸ்ரேல் சென்றடைந்துள்ளனர்.
கேப்டன் ஸ்மித் மச்சார் இல்லாவிட்டால், இந்த விமானச் சம்பவம் முற்றிலும் மாறுபட்ட மற்றும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும் என்று கூறப்படுகிறது.
தன்னிடமிருந்த கடைசித் துளி ஆற்றலையும் பயன்படுத்தி மச்சார் கதவைத் திறந்ததே வானில் நடந்த ஆபத்தான சம்பவத்தை ஆபத்தில்லாமல் முடிவுக்குக் கொண்டுவர உதவியது என்று விமானத்தில் பயணித்த பயணிகளும், இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் டோரோன் ஸ்பீல்மேனும் தெரிவித்துள்ளனர்.
கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயமடைந்த நிலையிலும், எதிர்த்துப் போராடி, காக்பிட் கதவைத் திறந்து, பயணிகள் மற்றும் விமானக் குழுவினருடன் தாக்குதல் நடத்தியவரைத் தடுத்ததாகவும் இதன் மூலம் வானில் நிகழவிருந்த பெரும் பேரழிவைத் தடுத்ததாகவும் இஸ்ரேல் குடிமக்கள் உட்பட 174 பேர்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
பிரதமர் நெதன்யாகுவால் நாயகனாகப் பாராட்டப்பட்டதோடு மட்டுமல்லாமல், பிரதமர் மோடியும் கேப்டன் ஸ்மித் மச்சார் தனது துணை விமானியை எதிர்த்துப் போராடி நிலைமையைச் சமாளித்ததற்காக பாராட்டியுள்ளார்.
கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு நாயகன் என்று பாராட்டியுள்ள பிரதமர் மோடி, மிகக் கடுமையான ஆபத்தை எதிர்கொண்ட நிலையிலும், பலத்த காயமடைந்திருந்த போதிலும், மற்றவர்களின் உயிரைக் காப்பதில் அளப்பரிய தைரியத்தையும் அசைக்க முடியாத உறுதியையும் வெளிப்படுத்திய அவரது வீரம் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றவும், ஒரு பெரும் துயரத்தைத் தவிர்க்கவும் உதவியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் கேப்டன் ஸ்மித் மச்சார் குறித்து இந்தியா பெருமை கொள்வதாகவும் அவர் விரைவில் குணமடையவும், புத்துணர்ச்சியுடனும் நல்ல உடல்நலத்துடனும் திகழவும் பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மோசமான நிலையிலும் கேப்டன் ஸ்மித் மச்சார் செயல்பட்ட விதம் வியக்கத்தக்கது என்றும் அவர் ஒரு ஹீரோ என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டியுள்ளார்.
துணிச்சலான செயலால் ஒரு பெரிய விமானத் தாக்குதலைத் தடுத்த கேப்டன் ஸ்மித் மச்சார் மொத்தம் 9,750 மணிநேர விமானத்தை இயக்கிய அனுபவமும், 13 ஆண்டுகளுக்கும் மேலான விமானப் பணி அனுபவமும் உடையவர்.
முன்னதாக ‘ஸ்பைஸ்ஜெட்’ நிறுவனத்தில் ‘லைன் டிரெய்னிங் கேப்டனாக பணியாற்றியுள்ள கேப்டன் ஸ்மித் மச்சார், விமானிகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் நடைமுறைப் பணிப் பயிற்சி அளிப்பது ஆகியவற்றில் சிறந்த தொழில்முறை வல்லமை உடையவர் என்று கூறப்படுகிறது.
தங்கள் பணி வாழ்க்கையின் ஆரம்பக் கட்டங்களில், தாங்கள் எங்கு பறக்கிறோம் எந்த விமானத்தை இயக்குகிறோம் என்பதில் கவனம் செலுத்தக்கூடாது என்றும். அதற்குப் பதிலாக,விமானியாக இருப்பதன் நோக்கம் என்ன என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் இளம் விமானிகளுக்கு அறிவுரை கேப்டன் ஸ்மித் மச்சார் கூறியிருந்தது குறிப்பிடத் தக்கது.
இது குறித்து விசாரணையை சவுதி அரேபியாவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு மையம் தொடங்கியுள்ள நிலையில் என்ன நடந்தது என்பதை உறுதிப்படுத்தவும் ஆதாரங்களைச் சேகரிக்கவும் தங்கள் குழு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக அந்த மையம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலும் இந்த விசாரணையில் இணையும் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.
மேலும் விசாரணை நடைபெறும் வரை இஸ்ரேலுக்கான மற்றும் அங்கிருந்து வரும் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்படும் என்று ‘ஃப்ளைதுபாய்’ நிறுவனம் அறிவித்துள்ளது.
















