திருவண்ணாமலை மல்லப்பம்பாடி ஏரியில் சட்டவிரோதமாக மண் அள்ளிய விவகாரத்தில், திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் மல்லப்பம்பாடி ஏரியில் இருந்து அனுமதியின்றி மண் மற்றும் சரளை உள்ளிட்ட ஏரிப்படுகைப் பொருட்களை அகற்றி, திமுக வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு நடைபெற்ற இடத்தை சமன்படுத்தியதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, அவரது மகன் எ.வ.வே.குமரன் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டி.ஜெயராம் வெங்கடேசன் கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி அளித்த புகாரின் அடிப்படையில் உண்மைத்தன்மை சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2025 நவம்பர் முதல் டிசம்பர் முதல் வாரம் வரை சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் 10 முதல் 23 அடி ஆழம் வரை ஏரி தோண்டப்பட்டதாகவும்,
சுமார் 8 ஏக்கர் பகுதியில் இருந்து ஏரிப்படுகை மணல் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் F.I.R-ல் கூறப்பட்டுள்ளது.
இதனால் அரசுக்கு 8 கோடியே 22 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும், மாநாடு நடைபெற்ற நிலத்தின் நுழைவாயில் வரை ஏரியின் கரை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதி வழியாக அணுகுசாலை சட்டவிரோதமாக விரிவாக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
















