சரவெடி பட்டாசுகளை அனுமதிக்கலாம் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், சில கட்டுப்பாடுகளுடன் சரவெடிகளை தயாரிக்கலாம் என தெரிவித்துள்ளது.
பட்டாசுகளால் ஏற்படும் காற்று மாசு தொடர்பான வழக்கில், மத்திய அரசு தரப்பில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், மாசு குறைந்த சிறிய ஷெல் மற்றும் சிறிய பைப் வகை பட்டாசுகளை தயாரிக்க அனுமதிக்கலாம் என்றும் கூறப்பட்டது.
இதனிடையே, பட்டாசுக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என மனுதாரர்கள் வலியுறுத்தினர்.
ஆனால், இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், பட்டாசுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது என்றும், அவ்வாறு செய்வது மக்களின் உணர்வுகளை பாதிக்கும் என்றும் தெரிவித்தனர்.
அதேநேரம், குழந்தைகள், முதியோர் மற்றும் நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு, பட்டாசு வெடிக்கும் நேரத்திற்கு காலவரம்பு நிர்ணயிக்கப்படும் எனவும் நீதிபதிகள் கூறினர்.
மேலும், பேரியம் கலந்த பட்டாசுகள் தொடர்பான சோதனைக்காக மத்திய அரசு கோரிய கால அவகாசத்தை வழங்கிய நீதிமன்றம், வழக்கு விசாரணையை அக்டோபர் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.















