ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை சிக்மா திரைப்படம் நிச்சயம் பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக இயக்குநர் ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் சிக்மா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இதனை முன்னிட்டு படம் குறித்த தனது உணர்வுகளையும் நன்றிகளையும் ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
சிக்மா திரைப்படம் வெளியாகவிருப்பது உற்சாகமாக இருந்தாலும் பதற்றமும் உள்ளது எனவும், படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்வோம் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஒட்டுமொத்த படக்குழுவினரின் ஆதரவும், ஒத்துழைப்பும் இல்லாமல் சிக்மா திரைப்படம் சாத்தியமாகி இருக்காது எனவும், படத்தை சுவாரஷ்யமாகவும், விறுவிறுப்பான பொழுதுபோக்கு அனுபவமாகவும் உருவாக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
சினிமா எனும் பிரமாண்டமான திறமைக் கடலில், அறிமுக இயக்குநராக தனது பயணத்தைத் தொடங்குகிறேன் எனத் தெரிவித்துள்ள ஜேசன் சஞ்சய், அனைவரும் திரையரங்குகளில் படத்தைப் பார்த்து ஆதரவு கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்…
















