மண்டல பூஜை நிறைவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், கோயில் நிர்வாகம் அடிப்படை வசதிகளை செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 17ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேக மண்டல பூஜை ஆகம விதிப்படி 48 நாட்கள் நடைபெற வேண்டிய நிலையில், கோயில் நிர்வாகம் 16 நாட்களாக குறைத்துள்ளது. இந்நிலையில், மண்டல பூஜை இன்றுடன் நிறைவடைவதாலும், தொடர் விடுமுறை காரணமாக கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனிடையே, கோயில் பணியாளர்கள் பணம் பெற்றுக் கொண்டு சாமி தரிசனத்திற்கு அழைத்துச் செல்வதாகவும், அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என்றும் பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 3 மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் காத்திருந்தும் சாமி தரிசனம் செய்யாமல் திரும்பிச் செல்வதாக பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.
















