தாராபுரத்தில் உரிய ஆவணங்களின்றி 70 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், அதிமுக திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் செல்வகுமாரனை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில், சேலத்தில் இருந்து தாராபுரம் நோக்கி கொண்டு வரப்பட்ட 70 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆவணங்கள் இன்றி சிக்கியது. இந்தப் பணம் தேர்தல் தொடர்பான செலவுகளுக்காக கொண்டு வரப்பட்டதா, யாருக்காக கொண்டு வரப்பட்டது என்பது குறித்து தேர்தல் பறக்கும் படையினரும், போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் அதிமுக திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் செல்வகுமாரனை, போலீசார் விசாரணைக்காக தாராபுரம் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 500-க்கும் மேற்பட்ட அதிமுக-வினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் காவல் நிலையம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு பரபரப்பான சூழல் நிலவியது.
















