ஊழல் வழக்குகளில் சிக்கும் அரசு ஊழியர்கள் மீது, குற்றவியல் வழக்கு நிலுவையில் இருப்பதை காரணமாகக் கொண்டு ஒழுங்கு நடவடிக்கையைத் தாமதிக்கக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக பிடிபட்டு, பணியிடைநீக்கம் செய்யப்பட்ட 4 அரசு ஊழியர்கள், தங்களது பணியிடைநீக்கத்தை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி புகழேந்தி, குற்றவியல் வழக்கு நிலுவையில் இருந்தாலும், அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க எந்தத் தடையும் இல்லை எனத் தெரிவித்தார்.
பணியில் இருக்கும் அரசு ஊழியர் ஒருவர், குறிப்பாக ஊழல் வழக்கில் சிக்குவதை சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாது என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
நடத்தை விதிகளை மீறும் அரசு ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலம், அரசு நிர்வாகத்தின் தூய்மையைப் பாதுகாக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை எனவும் கூறினார்.
ஊழலுக்கு எதிரான வலுவான செய்தியை வழங்கும் வகையில், ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தினார்.
மேலும், இதுபோன்ற பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், அரசு ஊழியர் நடத்தை விதிகளில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என நீதிபதி அரசுக்கு பரிந்துரைத்தார்.
மனுதாரர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும், தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் நீதிபதி எச்சரித்தார்.
















